📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 12, 2026 11:01 PM

மின்சாரத்தைக் கணக்கெடுக்க 56 லட்சம் திறனளவிகள்: விரைவில் ‘டெண்டர்’

மின்சாரத்தைக் கணக்கெடுக்க 56 லட்சம் திறனளவிகள்: விரைவில் ‘டெண்டர்’

சென்னை: மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்க ‘ஸ்மார்ட் மீட்டர்’ எனப்படும் திறனளவிகளைப் பொருத்தும் திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. அந்த வகையில் 56 லட்சம் திறனளவிகளைப் பொருத்தி, பராமரிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் வீடுகளிலும் தொழிற்கூடங்களிலும் மின்வாரியப் பணியாளர்கள் நேரில் சென்று மின் பயன்பாட்டைக் கணக்கெடுப்பதற்குப் பதில், திறனளவி (ஸ்மார்ட் மீட்டர்) திட்டத்தை செயல்படுத்த மின் வாரியம் முடிவு செய்தது.

இந்தத் திறனளவியில் தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டு, அலுவலக கணினிச் சேவையகத்துடன் உடன் இணைக்கப்படும். மின் பயன்பாடு கணக்கெடுக்க வேண்டிய தேதி வந்ததும் தானாகவே கணக்கெடுத்து பயனாளரின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அது அனுப்பிவிடும்.

2025 மார்ச் மாதம் 20,000 கோடி ரூபாய் செலவில் மாநிலம் முழுவதும் 3.04 கோடி மின் இணைப்புகளில் திறனளவி பொருத்திப் பராமரிக்கும் பணிக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது.

அதில் 50 நிறுவனங்கள் பங்கேற்றன. அவை வழங்கிய தொழில்நுட்பப் புள்ளி திறக்கப்பட்ட நிலையில், அரசின் அனுமதி கிடைக்காததால், விலைப் புள்ளி திறக்கப்படாமல் இருந்தது.

இதனிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திறனளவி நிறுவுவதற்கான ஒப்பந்தப் புள்ளியில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் அனைத்துப் பயனாளர்க்கும் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள 50 லட்சம் தொழில் மற்றும் வணிகப் பயனாளர்க்கும் திறனளவி பொருத்தப்படும் என வரவுசெலவுத் திட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. எனவே, கடந்த திமுக ஆட்சியில் 3 கோடி மின் இணைப்புகளில், திறனளவி பொருத்தக் கோரிய ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட உள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இது குறித்து விரைவில் நடக்க உள்ள மின் வாரிய இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

ஒட்டு மொத்தமாக, தமிழகம் முழுவதும் 56 லட்சம் திறனளவிகளைப் பொருத்த மின் வாரியம் புதிதாக ஒப்பந்தப்புள்ளி கோர ஆயத்தமாகி வருகிறது.

முதற்கட்டமாகத் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் 1.25 லட்சம் திறனளவிகளை மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தின்கீழ், மின் வாரியம் பொருத்த உள்ளது.