📅 Tuesday, 04 August 2026 IST | ஆடி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 03, 2026 05:30 AM

மகிழ்ச்சிமிகுந்த தாய்மொழிக் கற்றல் நிகழ்ச்சி

மகிழ்ச்சிமிகுந்த தாய்மொழிக் கற்றல் நிகழ்ச்சி

தாய்மொழிக் கல்வி எல்லா மாணவர்களுக்கும் முக்கியம் என்பதை எடுத்துரைக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் மாபெரும் தாய்மொழிகளின் கருத்தரங்கு நடைபெறுகிறது.

பிள்ளைகளும் பெற்றோரும் திரளாகப் பங்கேற்ற இந்நிகழ்ச்சி சனிக்கிழமை ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்றது.

கல்வி அமைச்சுடன் தாய்மொழிக் கற்றல், வளர்ச்சிக் குழுக்கள் ஆகியவை இணைந்து நடத்தியுள்ளன.

இந்நிகழ்ச்சி 14வது ஆண்டாக நடைபெறுகிறது. ‘மகிழ்ச்சியான கண்டுபிடிப்புகளுக்கான ஒரு தோட்டம்’ (A Garden for Joyful Discovery) என்ற கருப்பொருளுடன் நிகழ்ச்சி நடந்தேறியது.

கதை சொல்வது, நாடகங்களில் பல வகையான கதாபாத்திரங்களில் நடிப்பது, இசைக்கருவி வாசிப்பது போன்ற நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற குடும்பத்தினர் தங்கள் மகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் 49 வயது தந்தை திரு சபரி, தமது மகன்களான 10 வயது சஷ்டிக், மூன்று வயது அஷ்ரித் ஆகியோருடன் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றதாகக் குறிப்பிட்டார்.

“சனிக்கிழமை போன்ற ஓய்வு நேரங்களில் பிள்ளைகளை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. பலரைச் சந்திப்பதற்கும், புதிய தகவல்களைக் கற்றுக்கொள்வதற்கும் இது சிறந்த வாய்ப்பு,” என்று திரு சபரி கூறினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

நிகழ்ச்சிவழி புதிய தமிழ்ச் சொற்களைக் கற்றுக்கொண்டதாக செயிண்ட் கேப்ரியல்ஸ் தொடக்கப்பள்ளியில் பயிலும் மூத்த மகன் சஷ்டிக் சபரி உற்சாகமாகக் கூறினான்.

ச‌‌ஷ்டிக்கைப் போல இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தாச்சோங் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 11 வயது சனா சுஹைலா மீரான் என்ற மாணவி தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, தமிழ் முரசு தொடர்பான நடவடிக்கை தனக்குப் பெரிதும் பிடித்திருந்ததாக அவர்மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

சிங்ஹுவா தொடக்கப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவர் ஜேடன் பிரஜித் மன‌‌‌ஷா, நாடாளுமன்ற உறுப்பினர் சையது ஹருன் அல்ஹப்ஷியுடன் பேச முடிந்ததில் மகிழ்வதாகக் கூறினார்.

ஓய்வு நேரங்களில் கைப்பந்து (Volleyball) விளையாடுவதும், மீன்கள் வளர்ப்பதும் தனது பொழுதுபோக்குகள் என்று கூறிய ஜேடன், எதிர்காலத்தில் தமிழ் மொழிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்.