மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிச்சயமாக நிறைவேற்றுவோம்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
பிரதமர் நரேந்திர மோடி
புதுடெல்லி: அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசன திருத்த (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026 ஆகிய 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று எக்ஸ் தளத்தில் வீடியே ஒன்றை வெளியிட்டார். “நமது நாரி சக்திக்கு (பெண் சக்தி) நாம் ஒரு வாக்குறுதி அளித்துள்ளோம், அதை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்ற தலைப்புடன் வெளியிட்ட வீடியோவில் பிரதமர் மோடி பேசியதாவது:
அரசியலில் பெண் சக்திகளுக்கு உரிய பங்களிப்பை வழங்குவதற்கான போராட்டம் பல தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக, இந்த நோக்கத்துக்காக முயற்சி செய்பவர்களில் நானும் ஒருவனாக இருந்து வருகிறேன். பல பெண்கள் இந்தப் பிரச்சினையை என்னிடம் எழுப்பியுள்ளனர். பல சகோதரிகள் தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்டு எனக்குக் கடிதங்கள் எழுதியுள்ளனர். நாட்டின் 100% பெண் சக்தியின் ஆசீர்வாதம் நம்முடன் உள்ளது என்பதை நான் அறிவேன்.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வரும் ஒவ்வொரு தடையையும் நாங்கள் அகற்றுவோம் என்று நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் நான் உறுதியளிக்கிறேன். எங்களுக்கு மன உறுதி அதிகமாக உள்ளது, எங்கள் தைரியம் அசைக்க முடியாதது, எங்கள் தீர்மானம் உறுதியானது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் கட்சிகள், சட்டப்பேரவை அமைப்புகளில் பெண்கள் அதிக பிரதிநிதித்துவம் பெறுவதைத் தடுக்க முயற்சிக்கின்றன.
மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் கட்சிகளால், இந்த நாட்டின் பெண் சக்தி நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப்பேரவைகளிலும் தங்கள் பங்களிப்பை அதிகரிப்பதை ஒருபோதும் தடுக்க முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.