மலையில் இருந்து குதித்து மகன், பெற்றோர் உயிரிழந்த சம்பவம்: கடைசியாக கணவரை விமர்சித்து மனைவி வெளியிட்ட வீடியோ வைரல்
மும்பை: மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முரளிதர் சந்த்குடே (48). அவரது மனைவி சங்கீதா (44). இத்தம்பதியின் மகன் குணால் (18). கடந்த 21-ம் தேதி கவாடா மலையில் இருந்து கீழே குதித்து குணால் தற்கொலை செய்து கொண்டார்.
அவரைக் காப்பாற்ற முயன்ற தந்தை முரளிதர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதைப் பார்த்த சங்கீதா மலையில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். அண்மையில் குணால் தவணை முறையில் ஐ போனை வாங்கி உள்ளார்.
அதற்கு தந்தை முரளிதர் தவணைத் தொகையை செலுத்த மறுத்ததால் மகன் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது தெரியவந்துள்ளது. லாரி ஓட்டுநரான முரளிதர் பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். அவரது மனைவி சங்கீதா உள்ளூர் யூ டியூப் பிரபலமாக இருந்தார். இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.
கணவரின் வருமானம், குடும்ப சொத்துகள் உள்ளிட்ட விவகாரங்களில் முரளிதர், சங்கீதா இடையே பிரச்சினைகள் நீடித்து வந்தன. இந்த சூழலில் கடந்த 20-ம் தேதி சங்கீதா யூ டியூபில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒருவர் உங்களை நேசித்தால், அந்த நபரின் அன்புக்காக எதையும் செய்யலாம். ஆனால் உங்கள் அன்பை புரிந்து கொள்ளாத நபரால் எந்தப் பயனும் இல்லை. அப்படிப்பட்ட நபருக்காக நாம் எதையும் செய்யத் தேவையில்லை. இருவரும் பரஸ்பரம் நேசித்தால் மட்டுமே உறவு நீடித்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கணவரை விமர்சிக்கும் வகையில் சங்கீதா வெளியிட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.