மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3
ETV Bharat / education-and-career
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ஆவது இடம்! பல்கலை., பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்துள்ளார்.
Published : July 28, 2026 at 2:14 PM IST
திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது இடத்தில் பாடப்பட்டதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
தமிழ்நாட்டின் மாநிலப் பாடலான “நீராரும் கடலுடுத்த” எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ. சுந்தரனார் ஆவார். இவரது பெயரில், நெல்லை மாவட்டத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு 33-ஆவது பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 28) நடைபெறுகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 871 பேருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கையால் பட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பல்கலைக்கழக விருதினர் விடுதிக்கு முன்னதாகவே வருகை தந்தார். சரியாக இன்று (ஜூலை 28) காலை 10.30 மணிக்கு பட்டமளிப்பு விழா தொடங்கும் என பல்கலைக்கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டதால் பட்டம் பெரும் மாணவர்களும், முனைவர்களும் முன்னதாகவே அரங்கில் தயாராக இருந்தனர்.
இதனிடையே 871 பேருக்கு பதிலாக 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் நேரடியாக பட்டம் வழங்குவார் எனவும், மீதமுள்ள நபர்களுக்கு துணைவேந்தர் டாக்டர். சந்திரசேகர் பட்டங்களை வழங்குவார் எனவும் மேடையில் அறிவிக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக, முனைவர் பட்டம் பெறும் மாணவர்கள் சிலர் “ஆளுநர் கையால் தான் பட்டம் பெறுவோம். அதற்காகத்தான் அதிகாலையில் இருந்து காத்துக்கொண்டிருக்கிறோம். திடீரென ஆளுநர் பட்டம் வழங்க மாட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் பலர் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிலும், பெண் முனைவர்கள் சிலர் ஆளுநர் கையால் தான் பட்டம் பெற வேண்டும் என்று உணர்ச்சி பொங்க கண்ணீர் விட்டு அழுதனர்.
இதனால், பட்டமளிப்பு விழா அரங்கு பெரும் பரபரப்புக்கு உள்ளானது. இதையடுத்து, ஆளுநரிடம் பேசிவிட்டு முடிவை அறிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, ஆளுநரின் தனிச் செயலாளர் பட்டமளிப்பு விழா அரங்கிற்கு நேரில் வந்து மாணவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர், தனிச் செயலாளர் ஆளுநருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, வழக்கம்போல் அனைத்து மாணவர்களுக்கும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேரடியாக பட்டம் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட மாணவர்கள் கைகளை தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து
இந்த பரபரப்பின் காரணமாக பட்டமளிப்பு விழா 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கப்பட்டது. அப்போது, பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டு, அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்ட பின்னர் தான், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் பாடப்படும் என்ற துணைவேந்தர் அறிவிப்புக்கு எதிர்ப்பு! தமிழ்மொழிக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் உரிய மரியாதை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டின் அடிப்படையில்,…
முன்னதாகவே, ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரலில் இந்த நடைமுறை குறிப்பிடப்பட்டிருந்ததால்,இவ்விழாவை உயர்க்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் விஸ்வநாதன், “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் பாடப்படும் என்ற துணைவேந்தர் அறிவிப்பை எதிர்க்கிறேன். தமிழ்மொழிக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் உரிய மரியாதை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டின் அடிப்படையில், நான் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளேன்.
ஆளுநர் பட்டமளிப்பும்; சர்ச்சைகளும்
தமிழின் மரியாதையைப் பாதுகாக்கும் இந்த நிலைப்பாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உரிய இடமும், உரிய மரியாதையும் எப்போதும் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என்றும், வந்தே மாதரம் முதலில் பாடப்படும் என்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர். சந்திரசேகர் அறிவித்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால், இன்று ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடைபெற வாய்ப்பு இருப்பதால் பல்கலைக்கழக வளாகத்தில் எஸ்.பி. விஸ்வேஸ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி தலைமையில் அதிரப்படை காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆளுநரின் கையால் பட்டத்தை வாங்க மறுத்துவிட்டார். எனவே, அதுபோன்று மீண்டும் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்கவே ஆளுநர் அனைவருக்கும் பட்டம் வழங்க மாட்டார் என்று முதலில் பல்கலைக்கழகம் முடிவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.