📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 06, 2026 02:30 PM

மண்வளத்தைப் பாதுகாக்க ரூ.600 கோடி திட்டம்

மண்வளத்தைப் பாதுகாக்க ரூ.600 கோடி திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ரசாயன உர பயன்பாட்டைக் குறைக்க ரூ.600 கோடி செலவில் ‘தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்’ ஐந்தாண்டுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் இத்திட்டம் ரூ.122.51 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்.

தமிழகச் சட்டமன்றத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) நடப்பாண்டுக்கான பொது வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் வேளாண் வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார்.

அதில் மண்வளத்தைப் பாதுகாக்கவும் இயற்கை வேளாண் முறைகளை ஊக்குவிக்கவும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

வேளாண்மைத் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கில் வரவுசெலவுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, 20,000 ஏக்கரில் உயிர்ம வேளாண் முறைகளைப் பின்பற்றும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

மேலும், உயிர்ம விவசாயிகளுக்குச் சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும். நிரந்தர மண்புழு உரக் கூடங்கள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் நிலத்தின் தன்மையை அறிந்து சமச்சீர் உரமிடுவதற்காக ஒரு லட்சம் பேருக்கு ரூ.4 கோடி செலவிலும், உழவர் அடையாள எண் பெற்ற 3 லட்சம் பேருக்கு ரூ.6.16 கோடி செலவிலும் மண்வள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மண்வளத்தை மீட்டெடுக்க பசுந்தாள், பல்வகை தானிய விதைகள் மானியத்தில் விநியோகிக்கப்பட்டு, நிலத்தில் மக்கி உழுவதற்கு ஏக்கருக்கு ரூ.3,000 உழவு மானியம் என மொத்தம் ரூ.63.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திரவ உயிர் உரங்கள், பயிர் ஊக்கிகள் வழங்குவதற்காக ரூ.16.88 கோடியும், வளம் குறைந்த மண்ணைச் சீர்திருத்த ரூ.2 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, உயர்தர நெல் விதை உற்பத்தி, விநியோக மானியத்திற்காக ரூ.34.72 கோடி மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.