மொத ராத்திரி.. டைட்டில் தான் கில்மாவா இருக்கும்.. ஃபேமிலி படம் தான்.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'மொத ராத்திரி' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளது. அந்த படத்தை பார்த்துவிட்டு ப்ளூ சட்டை மாறன் எப்படி கழுவி ஊற்றப் போகிறாரோ என நினைத்த ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக அவர் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்தது ஷாக் கொடுத்துள்ளது.
வழக்கமாக கமர்ஷியல் படங்கள் வெளியானாலே ப்ளூ சட்டை மாறன் வெளுத்து வாங்கி விடுவார். ஆனால், மொத ராத்திரி படம் பாக்யராஜ் பாணியில் உருவாக்கப்பட்ட படம் என்றும் இன்னமும் கிளைமேக்ஸை சிறப்பாக கொடுத்திருந்தால், இது சூப்பர் படமாகவே மாறியிருக்கும் என்றும், ஆனாலும், குடும்பத்துடன் பார்க்கக் கூடிய நல்ல படமாகவே வந்துள்ளது என பாராட்டியுள்ளார்.
மொத ராத்திரி டைட்டில் மட்டும் தான் கில்மாவாக இருக்கும். ஆனால், படத்தை ஒட்டுமொத்தமாக குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம். எந்தவொரு ஆபாசமும் இல்லை, நல்லாவே இருக்கு என தனது விமர்சனத்தில் பாசிட்டிவ் மார்க் கொடுத்துள்ளார்.
பாக்யராஜ் ஸ்டைல் படம்: ஒரு வில்லங்கமான கதையை எடுத்துக் கொண்டு சிக்கலான முடிச்சுகளை போட்டு, கிளைமேக்ஸில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு எண்டிங்கை கொடுப்பதில் பாக்யராஜை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. அதே போன்ற ஒரு வேலையை அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி முடிந்த வரை செய்துள்ளார். இந்த மொத ராத்திரி படமும் பாக்யராஜ் ஸ்டைல் படம் தான் என ப்ளூ சட்டை மாறன் பாராட்டியுள்ளார்.
நான்கில் 3 சூப்பர்: இந்த படத்தை மொத்தம் 4 பாகங்களாக பிரித்துக் கொள்ளலாம். ஹீரோ, ஹீரோயின் இடையிலான போர்ஷன், ஹீரோயினை மொத ராத்திரிக்கு முன்னதாக கூட்டிக் கொண்டு ஓட வேண்டும் என வரும் காதலனும் அவர் கூடவே நண்பர்களாக வரும் 2 மனசாட்சிகள் இன்னொரு போர்ஷன், 3வதாக இரு வீட்டார் பெண்கள் டீம் ஒரு பக்கம் செய்யும் சேட்டைகள், கடைசியாக இருவீட்டார் ஆண்கள் டீம் ஒரு இடத்தில் பண்ணும் விஷயங்கள். இதில், ஆண்கள் அணியினர் சீன் தான் ரொம்பவே சுமார் ரகம். மற்ற 3 இடங்களுமே ரசிக்க வைத்து விட்டது.
தாராளமாக பார்க்கலாம்: இன்னும் கொஞ்சம் கிளைமேக்ஸில் கவனம் செலுத்தியிருந்தால் சூப்பர் படமாக வந்திருக்க வேண்டிய இந்த மொத ராத்திரி ஒரு முறை பார்க்கக் கூடிய படமாக வந்துள்ளது என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.