📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health October 08, 2026 03:03 AM

மருத்துவர் வேடத்தில் மாணவியர் விடுதிக்கு சென்று நகைகளை திருடிய பெண்

மருத்துவர் வேடத்தில் மாணவியர் விடுதிக்கு சென்று நகைகளை திருடிய பெண்

சென்னையில் மருத்துவர் வேடத்தில் மாணவியர் விடுதிக்கு சென்று நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

நகை திருட்டு

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள மாணவியர் விடுதியில் முதுநிலை மாணவி ஒருவர் தூங்கி கொண்டிருந்தபோது அவரது ஒன்றரை சவரன் தங்க சங்கிலி மற்றும் வைர நகைகள் காணாமல் போயுள்ளன. இதையடுத்து மற்ற மாணவிகளும் தங்களின் அறைகளில் ஆய்வு செய்தபோது மொத்தமாக 13 சவரன் தங்க நகைகளும், இரண்டு ஜோடி வைர கம்மலும் திருடப்பட்டது தெரியவந்தது.

இதற்கிடையே மருத்துவர் வேடமணிந்து பெண் ஒருவர் மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரிந்தார். அவர் மீது சந்தேகமடைந்த மருத்துவர்கள், அவரை மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் அவரை ஏழுகிணறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த தகவல் மாணவிகளின் வாட்ஸ் அப் குரூப்பில் பகிரப்பட்டது. பின்னர், நகைகளை இழந்த மாணவிகள் காவல் நிலையம் சென்று பார்த்தபோது தங்கள் அறைகளில் திருடப்பட்ட நகைகள் அங்கு இருந்துள்ளன.

இது குறித்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த சுவேதா என்பது தெரியவந்தது. அவர் மீது பல்வேறு திருட்டு மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை செய்தபோது தனது கணவர் மற்றும் தந்தை இறந்துவிட்டதால் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த திருட்டில் ஈடுபட்டதாக சுவேதா தெரிவித்தார்.

இவருக்கு 2-வது திருமணம் ஆன நிலையில் கணவருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். கர்ப்பப்பை தொடர்பாக உடல்நல பிரச்சினை இருப்பதால் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்துள்ளார். சிகிச்சைக்காக வந்ததை பயன்படுத்தி கொண்டு, மருத்துவர் வேடமணிந்து மாணவியர் விடுதிக்கு சென்று நகைகளை திருடி விட்டு அந்த பணத்தை கிழக்கு தாம்பரத்தில் வசிக்கும் தனது தாயாரின் செலவுக்காக கொடுத்து விட்டு மீண்டும் பெங்களூருவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

மாணவிகளின் நகைகளை திருடிய வழக்கில் சுவேதாவை போலீசார் கைது செய்தனர். மருத்துவர் வேடமணிந்து மாணவியர் விடுதிக்கு சென்று நகையை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.