📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 17, 2026 04:33 AM

மும்மொழி கொள்கையில் ஹிந்தி திணிப்பு இல்லை: தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

மும்மொழி கொள்கையில் ஹிந்தி திணிப்பு இல்லை: தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

-டில்லி சிறப்பு நிருபர் -

'மத்திய அரசின் மும்மொழி கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை. மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் ஏதேனும் ஒரு மூன்றாவது மொழி என்று தான் உள்ளது. ஹிந்தியை விரும்பவில்லை என்றால், சமஸ்கிருதத்தை கற்பிப்பதில் என்ன பிரச்னை?' என, தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

'தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஜவஹர் நவோதயா பள்ளிகளை தொடங்க, மாநில அரசு அனுமதிக்க வேண்டும்' என, கடந்த 2017ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி பி.வி.நாகரத்னா, ''தமிழகத்தில் தற்போது புதிய அரசு அமைந்துள்ளது. நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் மாநில அரசின் கொள்கை முடிவு என்னவென்பதை அறிய விரும்புகிறோம்.

''தமிழகத்தில் உடனடியாக பள்ளிகளை கட்டச் சொல்லவில்லை; அதற்கான இடங்களை மட்டும் தான் கண்டறிய சொல்கிறோம். தமிழகத்தில் மட்டும் நவோதயா பள்ளிகளுக்கு ஏன் இத்தனை எதிர்ப்பு என புரியவில்லை,'' என்றார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''நவோதயா பள்ளிகளில் பின்பற்றப்படும் மும்மொழி கொள்கை காரணமாகவே, மாநில அரசு இதை எதிர்க்கிறது,'' என வாதிட்டார்.

இம்முறை மீண்டும் குறுக்கிட்ட நீதிபதி பி.வி.நாகரத்னா, ''மத்திய அரசின் திட்டம் என்பதால் மட்டுமே அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற அணுகுமுறை இருக்கக் கூடாது. மாநிலத்திற்கு தனி கல்வி முறை இருக்கலாம், ஆனால், மத்திய அரசுப் பள்ளிகளை தடுப்பது சரியாக இருக்காது.

''மத்திய அரசின் மும்மொழி கொள்கை ஹிந்தி மொழியை கட்டாயமாக்கவில்லை. மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் விருப்பத்திற்கேற்ப ஏதேனும் ஒரு மூன்றாவது மொழியை கற்கலாம் என்றே அதில் கூறப்பட்டுள்ளது. ஹிந்தி வேண்டாம் என்கிறீர்கள்; அப்படியெனில் சமஸ்கிருதத்தை சொல்லி தருவதில் என்ன பிரச்னை?'' என கேள்வி எழுப்பினார்.

இதற்கு தமிழக அரசு தர ப்பில், 'நவோதயா பள்ளிகள் தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க, 12 வாரங்கள் கால அவகாசம் வேண்டும்' என கோரப்பட்டது.

இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்குவது தொடர்பாக, மத்திய மற்றும் மாநில அரசு களுக்கு இடையே தற்போது பேச்சுகள் நடந்து வருகின்றன.

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள புதிய அரசின் கொள்கை முடிவு என்னவென்பதை அறிய விரும்புகிறோம். எனவே, தற்போதைய அரசின் கொள்கை, அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்னவென்பது குறித்து, மூன்று வாரங்களுக்குள் விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆக., 11க்கு ஒத்திவைத்தனர்.

'6ல் இருந்தே தொடங்குங்கள் 9ம் வகுப்பிலிருந்து வேண்டாம்' நவோதயா பள்ளிகள் தொடர்பாக நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு மற்றும் சி.பி.எஸ்.இ.,க்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முக்கியமான உத்தரவு: சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பில் இருந்து மூன்றாவது மொழியை அறிமுகம் செய்ய வேண்டாம். அந்த வயதில் மாணவர்களுக்கு ஏற்கனவே கல்விச்சுமை அதிகமாக உள்ளது. இது, மாணவர்களின் மன அழுத்தத்தை தேவையின்றி அதிகரிக்கும். புதிய மொழியை கற்பிக்க வேண்டுமென்றால், ஐந்து அல்லது ஆறாம் வகுப்பில் இருந்தே தொடங்குங்கள். ஒரு மொழியை, எவ்வளவு விரைவாக கற்க தொடங்குகிறோமோ அவ்வளவு நல்லது. நீதிமன்றத்தின் இந்த எண்ணத்தை அரசிடம் தெரிவியுங்கள். இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.