📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil November 27, 2026 01:01 PM

முன்கட்டணத் திட்டங்களுக்கு கால அவகாசம்: பயனீட்டாளர் பாதுகாப்பு

முன்கட்டணத் திட்டங்களுக்கு கால அவகாசம்: பயனீட்டாளர் பாதுகாப்பு

சிங்கப்பூரின் பயனீட்டாளர்ப் பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்யும் குழு ஒன்றின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், பயனீட்டாளர்கள் தாங்கள் வாங்கிய அதிக விலையுள்ள முன்கட்டணத் தொகுப்புத் திட்டங்கள் குறித்து மறுபரிசீலனை செய்வதற்கும் அவற்றை அபராதம் இன்றி ரத்து செய்வதற்கும் கட்டாயக் கால அவகாசம் வழங்கப்படலாம்.

முறையற்ற விற்பனை அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கக்கூடிய பயனீட்டாளர்களுக்குக் கடையை விட்டு வெளியேறிய பிறகும் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அந்தக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தகைய சூழல் அதிகம் ஏற்படக்கூடிய துறைகளில் அதனை நடைமுறைப்படுத்தப் பரிந்துரைத்துள்ள அக்குழு, அழகு, நல்வாழ்வுத் துறையை முன்னுரிமையாகக் குறிப்பிட்டுள்ளது.

தனது பரிந்துரைகளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) அறிவித்த அக்குழு, சமூக ஊடகப் பிரபலங்களின் விளம்பரங்களில் அதிக வெளிப்படைத்தன்மையும் நுழைவுச்சீட்டு விற்பனையில் வலுவான பாதுகாப்பும் இருக்கவேண்டும் என்றும் முன்மொழிந்துள்ளது. தனது ஏழு பரிந்துரைகளையும் அதே தினத்தன்று அரசாங்கத்திடம் அக்குழு சமர்ப்பித்தது.

கடைசியாக, கடந்த 2018ஆம் ஆண்டில் பயனீட்டாளர் பாதுகாப்பு (நியாயமான வர்த்தக) சட்டத்தில் முக்கியத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, சிங்கப்பூரின் பயனீட்டாளர் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து நடத்தப்படும் முதல் விரிவான மறுஆய்வு இது என்று அக்குழுவின் இணைத் தலைவரும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் தலைவருமான மெல்வின் யோங் தெரிவித்தார்.

அந்தப் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், அதிகமான பயனீட்டாளர்கள் தங்களது பிரச்சினைகளை நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்ல முடியும்.

பயனீட்டாளர் கோரிக்கைகளுக்கான வழக்கமான உச்சவரம்பை தற்போதைய 20,000 வெள்ளியிலிருந்து 30,000 வெள்ளியாகச் சிறு கோரிக்கைகள் நடுவர் மன்றம் உயர்த்த வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.

வழக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் ஒப்புக்கொண்டால், அந்த உச்சவரம்பை தற்போதைய 30,000 வெள்ளியிலிருந்து 60,000 வெள்ளியாக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கார்-பகிர்வு சேவைகள், வாகன வாடகை ஒப்பந்தங்களின் கீழ் செலுத்தப்படும் வைப்புத்தொகை தொடர்பான தகராறுகள் உள்ளிட்ட பிற பிரச்சினைகளையும் உள்ளடக்கும் வகையில், நடுவர் மன்றம் விசாரிக்கக்கூடிய கோரிக்கைகளின் பிரிவுகளை மறுஆய்வு செய்து விரிவுபடுத்த வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.