முதல்வர் விஜய், அமைச்சர்களை ஏக வசனத்தில் பேசிய திருவையாறு திமுக எம்.எல்.ஏ: அடுத்த கைது இவர்தானா?
-நமது நிருபர்-
தஞ்சை: திருவையாறு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரசேகரன், முதல்வர் விஜய், அமைச்சர்களை ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில், தமிழக எதிர்கட்சி தலைவரும், தி.மு.க., இளைஞரணி செயலாளருமான உதயநிதி கலந்துக்கொண்டனர். அவ்விழாவில் மேடையில் உதயநிதி இருக்கும் போது, மணமக்களை வாழ்த்தி, திருவையாறு எம்.எல்.ஏ., சந்திரசேகரன் பேசியதாவது: தஞ்சாவூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டத்தில் ஒருத்தன் திரிஷா வாழ்க என கத்தினான். அப்போது உதயநிதி பேசும் போது, காவிரியில் தண்ணீர் இல்லை என பேசினார். இதை ரிலேட் செய்து, ஒரு வழக்கு போட்டனர். கைது செய்து, செங்கிப்பட்டிக்கு அழைத்து வந்து விசாரணைக்குப் பிறகு திரும்பி சென்றார்.
மறுநாள் சட்டசபையில் முதல்வர் விஜய் வந்து கும்பிடாரு. ஆனால், அன்னைக்கு கும்பிடக்கூடாது என்பது என்னோட எண்ணம். அவனை(முதல்வர்) விட கூடாது என, நாங்கள் யாரும் கும்பிடவில்லை. ஆளு மூடவுட் ஆயிட்டான். ரெண்டு பேரும் ஒண்ணுமே தெரியாத மாதிரி போனாங்க.
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக உதயநிதி இவ்வளவு கஷ்டத்தை ஏற்றுக்கொண்டார். அவரை போய் என்ன பண்ணப்போறான், கைது எல்லாம் பண்ணான். சட்டசபையில், நிர்மல்குமார் என்ன பண்ணான், 'கரூர் கம்பெனி' அப்படின்னான். 'ஐயோ சாரி, சாரி, கரூர் முன்னாள் அமைச்சர்' அப்படின்னான்.
உடனே, 'சங்கி அமைச்சர்', இல்லை சாரி சாரி, சட்ட அமைச்சர் அவர்களே அப்படி என உதயநிதி கூற, அவன் தலையை ஆட்டினான். வெளுத்து வாங்கிட்டாரு. நான் சும்மா பேசும்போது மாமான்னு தான் சொன்னேன். அவர்கள் நான் பொட்டு மாமான்னு சொல்லப்போறாங்கன்னு நினைச்சுடங்க.. அந்த வார்த்தையை யூஸ் பண்ணக்கூடாது, ஜி.ஓ. இருக்கா என துணை சபாநாயகர் கூறினார்.
எனக்கு ஒரே ஒரு வருத்தம், டி.ஆர்.பி., ராஜா, மகேஷ் இல்லாதது தான். கீர்த்தனானு ஒரு மந்திரி படுத்தும் பாடு பெரிய பாடா இருக்கு. சத்தியமா கடுப்புனா கடுப்பு, வேறு வழி இல்லையே, நாம் செஞ்சதை, நாங்க செஞ்சதா அவள் சொல்லுறா, நம்முடையை சாதனை எல்லாம், அவருடையை சாதனையாக எடுத்துகிறா.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன், ஐயய்யோ சாமி நம்மளால எல்லாம் தாங்க முடியல, அவ்வளவு டயலாக் விடுறான் பாத்துக்கோ. எனக்கு ஒரே ஒரு வருத்தம், ரஜினி வாசகம் ஞாபகத்துக்கு வருது. 'தப்பு பண்ணிட்யே சிங்காரம், தப்பு பண்ணிட்யேனு. தளபதியை என்னைக்கு கை வச்சானோ, அன்னையில் இருந்து தி.மு.க., மிக எழுச்சியாக இருக்கு, இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிலையில், முதல்வர் விஜய், பெண் அமைச்சர் கீர்த்தினா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சட்ட அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோரை ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.