வெற்றிப் பயணம்: தமிழக அரசின் மகளிர் இலவச பேருந்து திட்டம்
சென்னை: மகளிர்க்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ என்ற புதிய திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று அத்திட்டம் மாநிலம் முழுவதும் முறைப்படி செயல்பாட்டுக்கு வரும் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) அறிவித்தார்.
சட்டமன்ற விதி 110ன்கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய அவர், சாதாரண அரசுப் பேருந்துகள் மட்டுமன்றி, மாநகர, நகரப் பகுதிகளில் இயங்கும் விரைவு, குறைந்த எண்ணிக்கையிலான இடங்களில் நின்று செல்லும் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டார்.
புறநகர், மலைப் பகுதிகளில் இயங்கும் சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் மகளிர்க்குக் கட்டணமில்லாப் பயணம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற வருமான வரம்போ அல்லது பயண எண்ணிக்கைக் கட்டுப்பாடோ எதுவும் கிடையாது என்றும் மாற்றுப் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கும் இத்திட்டம் பொருந்தும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவதற்காக ஆண்டுக்கு ஏறக்குறைய 6,000 கோடி ரூபாய் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மகளிர் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளியல் சுதந்திரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு உள்ளதாகத் தமிழக அரசு மேலும் தெரிவித்துள்ளது.