முதல்வர் விஜய்க்கு நற்பெயர் வரக்கூடாது என திமுக நினைக்கிறது; அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
சென்னை: முதல்வர் விஜய்க்கு நற்பெயர் வந்துவிடக்கூடாது என நினைத்து திமுக செயல்படுகிறது என அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது பேட்டி: கர்நாடக முதல்வர் சிவக்குமாருக்கும், திமுக குடும்பத்துக்கும் கட்சியை தாண்டி நல்ல உறவு இருக்கிறது. திமுக தலைமை சொல்வதைத்தான் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் சொல்கிறார்; இவர்களுக்குள் இருக்கும் உறவு இதன்மூலம் வெட்ட வெளிச்சமாகிறது.
திமுக குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என டி.கே.சிவக்குமார் பல வகையில் விரும்பினார். காங்கிரஸ் தலைமை சொல்வதை கேட்பதை விட டி.கே.சிவக்குமார் திமுக குடும்பம் ஸ்டாலின் சொல்வதை தான் அதிகமாக கேட்கிறார்.
சிவக்குமார் என்ன சொல்ல நினைக்கிறாரோ அதை தான் திமுக சொல்கிறது. காவிரி விவகாரத்தில் சுமுகமான முறையில் தீர்வு காண முதல்வர் விஜய் முயற்சித்தார்; அவருக்கு நற்பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக முட்டுக்கட்டையாக திமுக செயல்படுகிறது.
கடந்த 30 வருடங்களாக எல்லா வகையிலும், காவிரி பிரச்னையில் பின்னடைவுகளை ஏற்படுத்த திமுகவும், கருணாநிதியும் தான் காரணம். தற்போதும் அதே குழப்பத்தை தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். தமிழக மக்களின் உரிமையை காக்க நாளை சுப்ரீம்கோர்ட்டில் முதல்வரின் உத்தரவின் பேரில் வழக்கு தொடுப்போம்.
தரம் கெட்ட அரசியலில் திமுக ஈடுபடுகிறது. சிவக்குமாருடன் சேர்ந்து திமுக தமிழக அரசுக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் ஈடுபடுகிறது. இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்