‘முவே தாய்’ தற்காப்புக் கலைப் போட்டியாளர்க்குக் கடும் காயம்
தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘ ஏஎம்சி 13 – ஃபைட் ஃபார் ஹோப்’ (Fight for Hope) என்ற ‘முவே தாய்’ தற்காப்புக் கலைப் போட்டியில் போட்டியாளர் ஒருவர் கடுமையாகக் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட போட்டியாளரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ அறிகிறது.
சிங்கப்பூர் ‘முவே தாய்’ சங்கம் செப்டம்பர் 17ஆம் தேதி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், போட்டியாளர்க்குக் களத்தில் இருந்த மருத்துவக் குழுவினர் உடனடி முதலுதவி அளித்ததாகவும் அதன்பின்னர் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிவித்தது.
“எங்கள் போட்டியாளர்களின் பாதுகாப்பும் நலனும் தலையாயவை,” என்று குறிப்பிட்ட சங்கம், இச்சம்பவம் குறித்து முறைப்படி மறு ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தது.
இதற்காக, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் சங்கம் கூறியது.
பாதிக்கப்பட்ட போட்டியாளரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் இந்தக் கடினமான காலத்தில் அவர்களுக்குத் தேவையான ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதாகவும் அந்த அமைப்பு கூறியது.
செப்டம்பர் 12 இரவு 7 மணியளவில் ‘1 ஸ்டேடியம் டிரைவ்’ முகவரியிலிருந்து உதவிகோரி அழைப்பு வந்ததாகவும் அங்கிருந்து ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இது தொடர்பாகப் புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்துள்ளது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
‘ஏஎம்சி 13 – ஃபைட் ஃபார் ஹோப்’ என்பது சிங்கப்பூர் மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளைக்கு ஆதரவாக சிங்கப்பூர் முவே தாய் சங்கம் நடத்தும் நிகழ்ச்சி.
கூடுதல் விவரங்களுக்காகச் சங்கத்தை ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தொடர்புகொண்டுள்ளது.