போலி $10,000 நோட்டு: இந்தோனீசிய ஆடவரிடம் தீவிர விசாரணை
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் (ஆர்டபிள்யூஎஸ்) சூதாட்டக் கூடத்தில் போலி $10,000 பணத்தாளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் இந்தோனீசிய தொழிலதிபர் ஒருவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ஸ்டீவன் என்று மட்டும் குறிப்பிடப்பட்ட அந்தத் தொழிலதிபர், ஜூன் மாதத்தில் சூதாட்ட வளாகத்திற்குச் சென்ற மூன்று சந்தர்ப்பங்களில் மொத்தம் 34 போலி $10,000 தாள்களைப் பயன்படுத்தியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பிடுகிறது.
சூதாட்ட வளாகத்தில் அந்தப் பணத்தாள்கள் போலி என்று கண்டறியப்படுவதற்கு முன்பாக அவை சூதாட்டச் சில்லுகளாக மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தனது வாடிக்கையாளர் மோசடியால் பாதிக்கப்பட்டவர் என்றும் அந்தப் பணத்தாள்கள் போலியானவை என்பது அவருக்குத் தெரியாது என்றும் ஜகார்த்தாவைச் சேர்ந்த அந்தத் தொழிலதிபரின் வழக்கறிஞர் யோசியா கின்டிங் செப்டம்பர் 17ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
ஜகார்த்தாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டங்கராங்கில், தான் விற்பனை செய்யவிருந்த கடைவீட்டுக்கான கட்டணமாகவே அந்தச் சிங்கப்பூர் தாள்கள் தனக்குக் கொடுக்கப்பட்டதாக ஸ்டீவன் கூறியதாக யோசியா சொன்னார்.
இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பில் ஜகார்த்தாவில் உள்ள சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட சிங்கப்பூர் காவல்துறைப் பிரதிநிதிகளுடன் செப்டம்பர் 14ஆம் தேதி இணையம் வழியாக ஒரு கூட்டம் நடத்தப்பட்டதாகத் தெற்கு டங்கராங் காவல்துறைத் தலைவர் போய் ஜுமாலோலோ கூறினார்.
இந்தோனீசியக் காவல்துறையின் அனைத்துலக உறவுகள் பிரிவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தோனீசியப் புலனாய்வாளர்கள் தற்போது சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பியிருக்கின்றனர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய சிங்கப்பூர் காவல்துறைப் பேச்சாளர் ஒருவர், விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.