📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 18, 2026 03:33 PM

“நான் தப்பு செய்து இருந்தால்..”.. முகமது ரிஸ்வான் ஆவேசம்.. பாகிஸ்தான் சைபர் கிரைமிடம் ஆதாரம் கேட்பு

“நான் தப்பு செய்து இருந்தால்..”.. முகமது ரிஸ்வான் ஆவேசம்.. பாகிஸ்தான் சைபர் கிரைமிடம் ஆதாரம் கேட்பு

“நான் தப்பு செய்து இருந்தால்..”.. முகமது ரிஸ்வான் ஆவேசம்.. பாகிஸ்தான் சைபர் கிரைமிடம் ஆதாரம் கேட்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்டர் முகமது ரிஸ்வான் மீது ஆன்லைன் சூதாட்டம் மற்றும் அணியின் ரகசியங்களை கசியவிட்டதாகக் கூறி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பாகிஸ்தானின் தேசிய சைபர் கிரைம் புலனாய்வு அமைப்பிடம் முகமது ரிஸ்வான் தனது காரசாரமான பதிலை அளித்துள்ளார்.

இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 0-3 என்ற கணக்கில் வரலாற்றுப் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து முதல் 2 போட்டிகளுக்குப் பிறகு முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக் உள்பட 7 வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாதியிலேயே நாட்டிற்கு திருப்பி அனுப்பியது.

அந்த வீரர்களின் செல்போன்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களது வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகள் குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற வீரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் முன்னாள் கேப்டன் முகமது ரிஸ்வான் நீதிமன்றம் வரை சென்று தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரிஸ்வான், "பாகிஸ்தான் அணிக்காக எனது முழு திறமையையும் வெளிப்படுத்தி நேர்மையாக உழைத்து வருகிறேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்ட குற்றச்சாட்டுகள் குறித்து எனக்கு எந்தவித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை. ஒரு சர்வதேச வீரர் மீது புகார் எழுந்தால் அதை ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவுதான் விசாரிக்க வேண்டும். அதை விடுத்து சைபர் கிரைம் ஏஜென்சி விசாரிப்பது எந்த வகையில் நியாயம்? என் மீதான குற்றச்சாட்டுகளின் முழு ஆதாரங்களையும் உடனடியாக என்னிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

முன்னதாக, சைபர் கிரைம் ஏஜென்சிக்கு இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை எனக் கூறி முகமது ரிஸ்வான் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனுவை நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துவிட்டது.

மற்றொரு வீரர் இமாம் உல் ஹக் விசாரணை கேள்விகளுக்கு பதிலளித்துவிட்ட நிலையில், ரிஸ்வான் அதிகாரிகளை எதிர்த்து போர்க்கொடி தூக்கியிருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.