அரசு ஊழியர்கள் சிங்கப்பூரர்களுடன் இணைந்து செயல்படவேண்டும்: சான் சுன் சிங்
பொதுச் சேவை ஊழியர்கள் சிங்கப்பூர் மக்களுக்காகச் செயல்படுவதிலிருந்து, அவர்களுடன் இணைந்து செயல்படும் நிலைக்கு மாற வேண்டும் என பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுங் சிங் வலியுறுத்தியுள்ளார்.
வெவ்வேறு குழுக்களுக்கிடையே பொதுவான இலக்கை நோக்கிய புரிதலை ஏற்படுத்துவதில் பொதுச் சேவை இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
பொதுச் சேவையில் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர்கள் நிறைந்த அவையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) திரு சான் உரையாற்றினார்.
சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அந்த வருடாந்திர பொதுச் சேவைத் தலைமைத்துவ விழாவில் ஏறத்தாழ 800 பொதுச் சேவை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
அதிகாரிகள் வெவ்வேறு விருப்பங்களைப் புரிந்துகொள்ள உண்மையான மனதுடன் செவிசாய்க்க வேண்டும் என்றும் அதிலுள்ள சாதக பாதகங்களை நேர்மையாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார்.
அவ்வாறு செய்வது, மக்களுக்குச் சேவை செய்வதிலிருந்து விலகி, அவர்களோடு இணைந்து செயலாற்றுவதற்கான புதிய வழிகளைக் கண்டறிய அதிகாரிகளுக்கு உதவும் என்றும் திரு சான் குறிப்பிட்டார்.
மாஜு காடு மற்றும் கில்மேன் பாராக்ஸ் மறுமேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த அண்மைய விவாதங்களைச் சுட்டிக்காட்டிய அவர், அவற்றில் ஒவ்வொருவருக்கும் வலுவான, தனிப்பட்ட கருத்துகளும் விருப்பங்களும் உள்ளன என்றார்.
“இருப்பினும், வீடமைப்புத் தேவைகள், நிலப் பயன்பாடு, மின்சாரம், போக்குவரத்து மற்றும் கழிவுநீர் திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு பரிசீலனைகள், சாதக பாதகங்கள் மற்றும் ஒட்டுமொத்த பெரிய திட்டத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“பொதுச் சேவையால் எதைச் செய்ய முடியும் என்பது குறித்து நாம் தெளிவான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். எல்லா விடைகளோ அல்லது திறன்களோ நம்மிடமே இருக்க வேண்டிய அவசியமில்லை,” என்று அவர் கூறினார்,” என்றார் திரு சான்.
மாஜு காடு மற்றும் கில்மேன் பாராக்ஸ் பகுதிகளில் முன்மொழியப்பட்ட பொது வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், அண்மைய மாதங்களில் சுற்றுப்புறச் சூழல் மீதான தாக்கம் மற்றும் சிங்கப்பூரின் மறுமேம்பாட்டு அணுகுமுறை குறித்து குடியிருப்பாளர்கள், இயற்கை ஆர்வக் குழுக்கள் மற்றும் பொதுமக்களிடையே விவாதங்களைத் தூண்டின.
பின்னர், அப்பகுதிகளில் அதிகப்படியான பசுமையைத் தக்கவைத்துக்கொள்ளப்போவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
தனிப்பட்ட சிக்கல்களில் உடன்பாடுகளை ஏற்படுத்துவதைத் தாண்டி, வெவ்வேறு குழுக்களை ஒன்றிணைத்து, பொதுவான இலக்கை நோக்கி அவர்களை வழிநடத்தி, ஒரு கூட்டு வெற்றியைப் பெற அரசு ஊழியர்கள் முயல வேண்டும் என்று திரு. சான் கூறினார்.
அதிகச் சிக்கலும் முரண்பாடுகளும் நிறைந்த உலகிற்குப் பொதுச் சேவை பதிலளிக்கும் மூன்று வழிகளைக் குறிப்பிட்ட அவர், மாறுபட்ட பார்வைகளையும் திறன்களையும் கூட்டு நடவடிக்கையாக மாற்றுவதும் அவற்றில் ஒன்று என்றார்.
தற்போதைய நிலையில் தலைமைத்துவத்திற்கான தேவைகள் மாறிவருகின்றன என்றும் திரு சான் தமது உரையில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்கான ஓர் உத்திபூர்வ வெளியை உருவாக்கிக்கொள்ளும் வகையில், புதிய இருதரப்பு மற்றும் பலதரப்பு பங்காளித்துவத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துமாறும் அரசு ஊழியர்களை அவர் கேட்டுக்கொண்டார்.