📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 18, 2026 06:34 PM

சிங்கப்பூர், சீனா தியான்ஜின் திட்டத்தை விரிவுபடுத்துகின்றன

சிங்கப்பூர், சீனா தியான்ஜின் திட்டத்தை விரிவுபடுத்துகின்றன

தியான்ஜின் சுற்றுச்சூழல் நகரத் திட்டத்தை விரிவுபடுத்தச் சிங்கப்பூரும் சீனாவும் கடப்பாடு கொண்டுள்ளன.

தியான்ஜின் சுற்றுச்சூழல் நகரத் திட்டம் 20 ஆண்டுகளை நெருங்குவதை ஒட்டித் தற்போது அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“சுற்றுச்சூழல் நகரத் திட்டத்தைப் பெய்ஜிங், தியான்ஜின், ஹெபெய் வட்டாரங்களுக்கு விரிவுபடுத்த இருநாடுகளும் முனைகின்றன. இதனால் நிறுவனங்களுக்குக் கூடுதல் வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்,” எனத் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார்.

சீனாவிற்குச் செப்டம்பர் 13 முதல் 18ஆம் தேதிவரை அமைச்சர் சீ அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.

பயணத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) செய்தியாளர்களைச் சந்தித்தபோது தியான்ஜின் சுற்றுச்சூழல் நகரத் திட்டம்குறித்து அவர் பேசினார்.

“இத்திட்டம் 2028ஆம் ஆண்டில் 20ஆம் ஆண்டைக் கொண்டாடும். நீண்டகால வளர்ச்சித் திட்டம் வகுக்க இரு தரப்பும் தொடர்ந்து ஆராயும். திட்ட விரிவாக்கத்தில் புதிய தொழில்நுட்பங்கள், புதிய நகரமைப்பு அணுகுமுறைகள் இடம்பெறக்கூடும். சிங்கப்பூர் கண்டுபிடிப்புகளைச் சீனாவின் மற்ற பகுதிகளுக்குக் கொண்டுசெல்ல தியான்ஜின் சிறந்த தளமாக அமையும். தென்கிழக்காசியாவில் வளர விரும்பும் சீன நிறுவனங்கள் சிங்கப்பூரைத் தொடக்கத் தளமாகப் பயன்படுத்தலாம்,” என அமைச்சர் சீ கூறினார்.

அமைச்சர் சீ, தியான்ஜின் மேயர் ஜாங் கோங்குடன் இணைந்து சிங்கப்பூர்-தியான்ஜின் பொருளியல், வர்த்தக மன்றக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

அமைச்சருடன் தேசிய வளர்ச்சி, போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங் சென்றிருந்தார். சிங்கப்பூர் வர்த்தகப் பிரதிநிதிகள் 80 பேரும் இப்பயணத்தில் கலந்துகொண்டனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தியான்ஜின் சுற்றுச்சூழல் நகரம் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது சூஷோ தொழில்பேட்டைக்குப் (1994) பிறகு இருநாடுகளுக்கு இடையிலான இரண்டாவது திட்டமாகும்.

பெய்ஜிங்கிலிருந்து 2 மணிநேரப் பயணத் தொலைவில் தியான்ஜின் சுற்றுச்சூழல் நகரம் அமைந்துள்ளது.

30 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அந்நகரம் செங்காங் பேட்டையைவிட மூன்று மடங்கு பெரியது. இங்கு 200,000 மக்களும் 30,000 பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களும் உள்ளன. அவை தொழில்நுட்பம், ஆராய்ச்சி, தளவாடத் துறைகளைச் சேர்ந்தவை.