நேபாள பெருவெள்ளம்: 2 மாவட்டங்களில் 600 சிறுவர்கள் மாயம்
காத்மாண்டு: நேபாளத்தில் பெருவெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் 600-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் நேற்று 10-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கொத்து கொத்தாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து இதுவரை 1,280 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட 2 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 1,282 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், பல்வேறு பகுதிகளிலும் வெளிநாட்டினர் உள்பட 4,798 பேர் மாயமாகி உள்ளனர். இந்நிலையில், பெருவெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் 600-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உள்ளூர் கல்வி மேம்பாட்டு மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொகுத்த தகவல்களை மேற்கோள் காட்டி காத்மாண்டு போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நுவாகோட் மாவட்டத்தில் 300 முதல் 350 சிறுவர்களும் ரசுவா மாவட்டத்தில் சுமார் 280 சிறுவர்களும் மாயமாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரிடர் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இரு மாவட்டங்களிலும் சேர்த்து 22 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் காணாமல் போயுள்ளதாக கல்வி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ரசுவா மாவட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 15 பேர், தனியார் பள்ளியைச் சேர்ந்த ஒருவர் என 16 ஆசிரியர்களும், நுவாகோட்டில் 6 ஆசிரியர்களும் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.