நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வங்கி லாக்கர்: ரூ.58 லட்சம் திருடி சிக்கிய 29 பேர்
காத்மாண்டு: நேபாளம் வெள்ளத்தின் போது பணத்துடன் வங்கி லாக்கர் மிதந்து வந்தது. அதில் இருந்து ரூ.58 லட்சம் திருடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேபாளம் பெருவெள்ளத்தின் பாதிப்புகள் இன்னமும் முழுமையாக தெரியாத நிலையே உள்ளது. உயிரிழப்புகள், சேத மதிப்புகள், மீட்புக்குழுவின் நடவடிக்கை என புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், பெரு வெள்ளத்தின் போது மிதந்து வந்த வங்கி லாக்கரில் இருந்து ரூ.58 லட்சம் திருடப்பட்டுள்ளது. போடேகோஷி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த லாக்கர், அடித்துச் செல்லப்பட்டது. தாடிங் மாவட்டம், பெல்குகோலா அருகே திரிசூலி ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டது.
அங்கே இருந்தவர்கள் திறந்து பார்த்த போது உள்ளே கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. அதை அங்குள்ள 29 பேர் தேவையான அளவு பங்கிட்டுக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த நேபாளம் போலீசாரும், ஆயுதப்படை போலீசாரும் ஒருங்கிணைந்து விசாரணையை தொடங்கினர்.
இதில், சந்தேக நபர்கள் 29 பேரை கைது செய்து, ரூ.58 லட்சத்தை பறிமுதல் செய்தனர். வங்கி லாக்கரில் ஒட்டுமொத்தமாக எத்தனை ரூபாய் இருந்தது என்பது தெரியவில்லை. அந்த லாக்கரின் உரிமையாளர் யார், எந்த வங்கியின் லாக்கர் என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.