📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 29, 2026 11:04 PM

நேபாளத்தில் சிக்கயுள்ள சேலம், நாமக்கல்லை சேர்ந்த 8 பேரை மீட்க வேண்டும்

நேபாளத்தில் சிக்கயுள்ள சேலம், நாமக்கல்லை சேர்ந்த 8 பேரை மீட்க வேண்டும்

நேபாளத்தில் சிக்கியுள்ள முன்னாள் எம்பியின் சகோதரர் உள்பட 8 பேரை மீட்க அரசுக்கு கோரிக்கை

யாத்திரை அழைத்துச் சென்ற டூரிஸ்ட் ஏஜென்சி தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வந்து சேரவில்லை என்று கைலாய யாத்திரைச் சென்றவர்களின் உறவினர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

Published : August 29, 2026 at 2:22 PM IST

சேலம்: நேபாளத்திற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருந்த நாமக்கல் முன்னாள் எம்பியின் சகோதரர் உள்பட 8 பேரை மீட்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேபாளத்தில் ரசுவா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 26- ஆம் தேதி காலை, கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அடித்து செல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கான வீடுகள், பாலங்கள், கட்டடங்கள், சாலைகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டது.

இந்த ராட்சத வெள்ளப்பெருக்கில், இந்தியாவில் இருந்து சுற்றுலா சென்ற குழுக்கள் சிக்கிக் கொண்டனர். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா சென்றவர்களில் இரண்டு குழுக்கள் வெள்ளத்தில் சிக்கியதாகவும், இரண்டு குழுக்கள் வெள்ளத்தில் இருந்து தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேர் உள்ளிட்ட 49 பேர் அடங்கிய குழு குறித்து, எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இதனால் அவர்களது உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள ’மகாதேவ் ஏஜென்சி’ மூலம் சேலம் அழகாபுரம் ஸ்ரீராம் நகரை சேர்ந்த நாகலட்சுமி, அவரது சகோதரி மகள் சசிரேகா, கருப்பூர், வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன், சேலம் மாவட்டம் மெய்யனூர் ஆலமரத்து காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் நேபாளம் சென்றுள்ளனர்.

அதேபோல் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அத்தனூர் பகுதியை சேர்ந்த முன்னாள் எம்பி சின்ராஜின் சகோதரர் பழனிவேல், அவரது மனைவி அருள்மணி, அசோகன், மாராயி உள்பட 8 பேர் கடந்த ஆகஸ்ட் 13- ஆம் தேதி சென்னைக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து 49 பேர் கொண்ட ஆன்மீக குழுவாக நேபாளத்திற்கு சென்ற இவர்கள், சம்பவம் நடந்த நாளில் காலையில் அங்குள்ள தூதரக பகுதியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், அன்றைய தினம், காலை 10.00 மணிக்கு பிறகு கைலாஷ் மானசரோவர் செல்ல அவர்கள் திட்டமிட்டு காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த வெள்ளப்பெருக்கில் அப்பகுதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் 49 பேரின் நிலை குறித்து பெரும் கவலை எழுந்துள்ளது. இதுகுறித்து நேபாளத்தில் சிக்கியுள்ள மணிகண்டனின் மனைவி மற்றும் உறவினர்கள் தகவல் தெரிவிக்கையில், கடந்த 25-ஆம் தேதிக்கு பிறகு 49 பேர் குழுவினரில் யாரிடமும் இருந்து தொடர்பு கிடைக்கவில்லை. யாராவது பேசுவார்கள் என்று காத்திருக்கிறோம்.

யாத்திரை அழைத்துச் சென்ற டூரிஸ்ட் ஏஜென்சி தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வந்து சேரவில்லை. அந்த 49 பேரும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று கூறிய அவர்களின் உறவினர்கள், மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நேபாளத்தில் சிக்கியவர்களை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.