📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 31, 2026 06:02 PM

நெல்லைச் சுமக்கும் தொழிலாளர்களின் உழைப்பை மதிக்குமா தமிழக அரசு?

நெல்லைச் சுமக்கும் தொழிலாளர்களின் உழைப்பை மதிக்குமா தமிழக அரசு?

நெல்லைச் சுமக்கும் தொழிலாளர்களின் உழைப்பை மதிக்குமா தமிழக அரசு? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

உழைப்புக்கு உரிய கூலி

இவர்கள் சுமப்பது வெறும் நெல் மூட்டைகள் மட்டுமல்ல. விவசாயியின் பல மாத உழைப்பின் பயனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் முக்கியப் பொறுப்பையும் சுமக்கின்றனர்.

நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரிசியாக மாற்றப்படுகிறது. அந்த அரிசிதான் மக்களின் அன்றாட உணவின் அடிப்படை. எனவே, நெல் கொள்முதல் சங்கிலியில் ஏற்படும் எந்தவொரு தடங்கலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கக்கூடியது.

விவசாயிகள் பரிதவிப்பு

தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி ஒரு வாரத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நெல் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அறுவடை செய்த நெல்லை உடனுக்குடன் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, சுமை தூக்கும் தொழிலாளர்களின் நியாயமான கூலி உயர்வு கோரிக்கைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். நெல் கொள்முதல் பணிகளைத் தடையின்றி நடத்தி, விவசாயிகளின் விளைபொருள்கள் மழையிலோ, வெயிலிலோ வீணாகாமல் பாதுகாக்கத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.