கொளத்தூர் தொகுதி தேர்தல் வெற்றி தொடர்பாக மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு
கொளத்தூர் தொகுதி தேர்தல் வெற்றி தொடர்பாக மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு
வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து மனு தாக்கல் செய்ய மு.க. ஸ்டாலின் தரப்புக்கு அனுமதி அளித்து நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
Published : August 31, 2026 at 2:01 PM IST
சென்னை: கொளத்தூர் தொகுதியில் தேர்தல் வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த 17வது சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க வேட்பாளர் வி.எஸ். பாபு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினை தோற்கடித்தார்.
இதையடுத்து அத்தொகுதியில் 2வது இடம் பிடித்த முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தை ஏற்று, கொளத்தூர் தொகுதியில் 14 ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.
இந்நிலையில், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ‘முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி பேடுகளை மீண்டும் சரிபார்க்க உத்தரவிட வேண்டும். த.வெ.க எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் வெற்றி செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க. ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், “45 நாட்களுக்குப் பிறகு தான் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டது. அதனால், காலதாமதமாக வழக்குப்பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதனால், தேர்தல் வழக்கை விசாரணைக்கு ஏற்று, எல்லா வாக்குப்பதிவு எந்திரங்களையும் சரிபார்க்க உத்தரவிட வேண்டும். மு.க.ஸ்டாலின் மே 7ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த நிலையில், ஜூலை 29ம் தேதி தான் சரிபார்ப்பு பணிகளை தொடங்கி, ஆக.5ம் தேதி முடித்துள்ளனர். தேர்தல் வழக்கை தொடர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே, காலதாமதமாக சரிபார்ப்பு பணியை தொடங்கினர்.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் தான் காலதாமதமாக வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் ஆணையம் தனது பணியை சரியாக செய்யவில்லை. அதற்கு மனுதாரர் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது” என தெரிவித்தார்.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தேர்தல் நடைமுறைகள், சில குறைபாடு, வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வழக்கு தொடர முடியாது என சட்டத்தில் தெளிவாக உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 329(b)-ன் படி முறைகேடு நடந்ததாக வழக்கு தொடர முடியாது. தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.
முறைகேடு நடந்ததாகக் கூறி சட்ட விதிகளுக்கு எதிராக, மு.க.ஸ்டாலின் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். தேர்தலில் போட்டியிட்ட யார் மனு அளித்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்படும்.
அதன்படி, வாக்குப்பதிவு எந்திரங்கள் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டது. அதனால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை. ஸ்டாலின் கூறுவது போல 14 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகவில்லை. எந்த வாக்குப்பதிவு எந்திரங்களும் மாற்றப்படவில்லை. சிறு கோளாறுகள் மட்டுமே இருந்தது. அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டது.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த வழக்கில், 2025ஆம் ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் பிரிவு 329(b)-ன் படி ஸ்டாலினின் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை” என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "45 நாட்கள் கடந்த நிலையில் ஏன் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தை அணுகி முறையிடவில்லை. வழக்கில் யாருக்கும் நோட்டீஸும் அனுப்பவில்லை" என கேள்வி எழுப்பினர்.
இடைக்காலமாக எந்த நிவாரணமும் வழங்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து மனு தாக்கல் செய்ய மு.க. ஸ்டாலின் தரப்புக்கு அனுமதி அளித்து வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.