நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மெளனம் கலைந்த பிரதமர் மோடி: மாணவர்களுடன் நிற்பதாக உருக்கம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மெளனம் கலைந்த பிரதமர் மோடி: மாணவர்களுடன் நிற்பதாக உருக்கம்
வினாத்தாள் கசிவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனக் கூறிய மோடி, இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
Published : July 21, 2026 at 9:09 PM IST
புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முதன்முதலாக மெளனம் கலைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த பிரச்சனையில் மாணவர்களுக்கு உறுதுணையாக அரசு நிற்பதாக தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
டெல்லியில் நேற்று கரப்பான் பூச்சி கட்சி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போலீசார் நேற்று பயங்கர தடியடி நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காயமடைந்தனர்.
இதனைக் கண்டித்து, டெல்லி மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று தே.ஜ. கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து எம்.பி.க்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்திற்கு பின்னர், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தனது வேதனையை பதிவு செய்தார்.
வினாத்தாள் கசிவு விவகாரத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது எனக் கூறிய மோடி, இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க மத்திய - மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நீட் மட்டுமல்லாமல் அனைத்து போட்டி தேர்வுகளின் நம்பகத்தன்மையை பாதுகாப்பது, ஒட்டுமொத்த இந்தியாவின் பொறுப்பு எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மேலும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் வெளியான உடனேயே, மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியதாக தெரிவித்த மோடி, இப்போது வரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
அத்துடன், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில், உடனடியாக நீட் மறு தேர்வை நடத்தியது மட்டுமின்றி, அதன் முடிவுகளையும் விரைவில் வெளியிட்டதாக மோடி குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதல் மாணவர்களுக்கு உறுதுணையாக மத்திய அரசு நிற்பதாகவும், எந்த சூழலிலும் அவர்களை அரசு கைவிடாது எனவும் மோடி உறுதியளித்தார்.
மேலும், லட்சக்கணக்கான மாணவர்களின் வேதனைக்கு காரணமான நீட் வினாத்தாள் கசிவு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த விஷயத்தை அரசியலாக்குவதை விட்டுவிட்டு, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க மத்திய அரசுடன் அரசியல் கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்" என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.