📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 17, 2026 04:03 AM

பழைய ஃபார்மில் திமுக; கைது செய்ததற்கு தவெக அரசுக்கு நன்றி

பழைய ஃபார்மில் திமுக; கைது செய்ததற்கு தவெக அரசுக்கு நன்றி

பழைய ஃபார்மில் திமுக; கைது செய்ததற்கு தவெக அரசுக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின்

த.வெ.க. அரசில் உள்ள அனைத்து அமைச்சர்களும் பெரிய வழக்கில் சிக்குவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Published : August 16, 2026 at 4:20 PM IST

சென்னை: தேர்தலுக்குப் பிறகு சோர்ந்து போயிருந்த திமுகவை மீண்டும் பழைய ஃபார்மிற்கு கொண்டு வந்ததற்கு த.வெ.க. அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக சட்டத்துறை சார்பில் இன்று (ஆக.16) நடைபெற்ற வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுக வழக்கறிஞர் அணிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவில் மட்டும் தான் ஒரு அணிக்கு சட்டத்துறை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. திமுக சட்டத்துறை தனித்துவம் வாய்ந்தது என புரிந்துக்கொள்ள முடிகிறது. திமுகவின் முதுகெலும்பு சட்டத்துறை.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மறைவிற்குப் பிறகு அண்ணா நினைவிடத்திற்கு அருகில் நினைவிடம் அமைக்கப்பட வேண்டும் என ஆசைப்பட்டதை சட்டப் போராட்டம் நடத்தி நிறைவேற்றியது சட்டத்துறை அணி. யாரும் எதிர்பார்க்காத, தமிழ்நாடு எதிர்பார்க்காத தேர்தல் முடிவு வந்துள்ளது.

தி.மு.கழகத்தின் கடைக்கோடி உடன்பிறப்புக்கும் வாளும் - கேடயமுமாக திகழும், கழக சட்டத்துறையின் வடக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற போது அதில் பங்கேற்றோம்.கழகத்தினர் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசினால் கைது செய்வது; அதுவே, டெல்லி ஓனர்கள்… pic.twitter.com/BRrJLbElt4

அட்டவணைப் போட்டு கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு

தமிழ்நாடு மட்டுமின்றி, ஆட்சிக்கு வந்துள்ள சர்க்கஸ் கூட்டமே எதிர்பார்க்காத அளவிற்கு தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. சர்க்கஸ் கூட்டம் ஆட்சிக்கு வந்தவுடன் திமுக வழக்கறிஞர் அணியின் பணி மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. கடந்த 100 நாட்களில் திமுக வழக்கறிஞர் அணிதான் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். தூங்கி எழுந்தால் யாரைக் கைது செய்யலாம் என அட்டவணை போட்டு த.வெ.க. அரசு கைது செய்து வருகிறது. தஞ்சாவூர் கூட்டத்தில் டம்மி முதலமைச்சர் என பேசினேன். அதை ஒப்புக்கொண்டார்கள்.

கேடுகெட்ட அரசு என விமர்சனம் செய்தேன். இதற்கெல்லாம் எந்த நடவடிக்கையும் இல்லை. காவிரியில் தண்ணீர் வர வேண்டும் என சொன்னேன். அதற்குக் கைது செய்கிறார்கள். என்னைக் கைது செய்ய காவல்துறையினர் வந்தபொழுது, என்.ஆர்.இளங்கோ மற்றும் வில்சன் உள்ளிட்டோர் வருவார்கள், அதுவரை அவர்களிடம் விசாரித்துக் கொண்டு இருங்கள் என திமுக தலைவர் அறிவுறுத்தினார்.

மக்கள் வரிப்பணத்தில் ரோடு ஷோ

கடந்த 100 நாட்களில் என்னை மட்டுமின்றி, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஜென்-ஸி இளைஞர்களையும் கைது செய்துள்ளார்கள். தேர்தலுக்குப் பிறகு ஜென்-ஸி இளைஞர்களை எழுப்பிவிட்டிருக்கிறோம். பவர் இல்லாதபோதும், எதிர்க்கட்சியாக இல்லாதபோதும் ஆளும் முதலமைச்சரை ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்பிய அணி திமுக வழக்கறிஞர் அணி. சீட்டுக்கட்டில் ஒரு ஜோக்கர் இருக்கும். ஆனால் 52-ம் ஜோக்கராக இருக்கிறது. வெகு விரைவில் அனைத்து அமைச்சர்களும் பெரிய வழக்கில் சிக்குவார்கள்.

மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்

த.வெ.க. கும்பலை பெயில் வாங்கும் அரசாக மாற்ற வேண்டும். மெஜாரிட்டி இல்லாத அரசு தவெக. திமுக சட்டமன்ற உறுப்பினர் என்றால் வழக்கும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால் சோபா அனுப்பி ராஜினாமா செய்ய வைத்து வருகிறார்கள். த.வெ.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. கோயம்புத்தூர் கொலை சம்பவத்தில் திமுக நீதி பெற்றுத் தர வேண்டும் என உயிரிழந்த மாணவரின் தாயார் கூறியுள்ளார். ஜென்-ஸி இளைஞர்கள் கொள்கையைப் பேச ஆரம்பித்திருக்கின்றார்கள். அதுதான் இன்றைய ஆட்சிக்கு பயத்தை உருவாக்கியுள்ளது. அவர்களை கைது செய்தால் அவர்களும், அவர்கள் குடும்பமும் பயந்து விடுவார்கள் என்று ஆட்சியாளர்கள் நினைக்கின்றார்கள்.

திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி பேட்டி

செய்தியாளர்களைச் சந்தித்த திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., "எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்யும் அளவில் காவல்துறை சர்வாதிகாரப் போக்கில் இருக்கிறது. கடந்த காலங்களில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது இவ்வளவு சர்வாதிகாரப் போக்கு இல்லை. கைது மற்றும் எதேச்சதிகாரப் போக்கில் திமுகவின் தொண்டர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

திமுக வழக்கறிஞர்கள் முன்கூட்டியே அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும். சமூக வலைதளத்தில் அருவருக்கத்தக்க வகையில் பேசி வருகிறார்கள். ஆளுங்கட்சிப் பரப்பும் தவறான பொய்ச் செய்திகளைப் பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அணியை மறுசீரமைக்க இளைஞரணி செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

அதில் அதிகமாக இளைஞர்கள் பங்கெடுக்க வேண்டும் என்று இளைஞர் அணி செயலாளர் கூறியிருக்கின்றார். மேலும், வழக்கறிஞர் அணியைத் தீவிரமாகக் கண்காணித்தும் வருகிறார்" எனத் தெரிவித்தார்.

திமுகவின் சட்டத்துறை அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்