நம்பகமான டாப்
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை அதீத வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் மின்சார இருசக்கர வாகன விற்பனை 2 லட்சத்தை கடந்து புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. வாடிக்கையாளர்கள் தற்போது ரேஞ்ச், விலை மட்டுமல்லாமல் வாங்கப்போகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டு மீதான நம்பகத்தன்மை, சர்வீஸ் நெட்வொர்க், பேட்டரி வாரண்டி, நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மறுவிற்பனை மதிப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை பார்த்துத்தான் வாங்குகின்றனர்.
மேலும், தற்போது பெட்ரோல் விலையும் மிகவும் அதிகரித்துள்ள சூழலில், தினசரி பயன்பாட்டிற்கு வீட்டிற்கு ஒரு மின்சார ஸ்கூட்டர் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், மின்சார ஸ்கூட்டர்களில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்னைகள் குறித்து அவ்வப்போது வெளியாகும் செய்திகள் பல வாடிக்கையாளர்களுக்கு முடிவு எடுப்பதில் தயக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், தற்போது விற்பனையில் உள்ள சிறந்த 5 ஸ்கூட்டர்களின் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
1. டிவிஎஸ் ஐக்யூப்
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் முதன்மையான மாடலாக டிவிஎஸ் ஐக்யூவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளது. தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க், ஸ்மூத்தான ரைடு குவாலிட்டி மற்றும் தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுவதும் குறைவாக இருப்பது இதன் மிகப்பெரிய பலம். தினசரி 20 முதல் 60 கிமீ வரை பயணிக்கும் குடும்பங்களுக்கு இது மிகவும் பொருத்தமான தேர்வாக கூறலாம். மேலும், பேட்டரிக்கும் 3 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ வாரண்டி தவிர்த்து 5 ஆண்டுகள் அல்லது 70,000 கிமீ தூரத்திற்கான கூடுதல் வாரண்டி திட்டமும் வழங்கப்படுகிறது. தற்போது விற்பனையில் உள்ள மாடல்களிலேயே அதிக நம்பிக்கையை பெற்ற மாடலாக தேர்வில் முன்னிலை வகிக்கிறது டிவிஎஸ் ஐக்யூப்.
2. பஜாஜ் சேத்தக் 35 சீரிஸ்
பஜாஜ் சேத்தக் விற்பனையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மிக முக்கியமான அம்சங்களாக இதன் உறுதியான மெட்டல் பாடி, சிறந்த ஃபிட் & ஃபினிஷ் ஆகியவற்றை கூறலாம். மேலும், இருசக்கர வாகனத் தயாரிப்பில் பஜாஜ் ஆட்டோவின் நீண்ட அனுபவமும், அதிக சர்வீஸ் சென்டர்களும் வலுசேர்க்கின்றன. நகர பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் இந்த ஸ்கூட்டரின் பராமரிப்பு செலவும் குறைவாக இருக்கும். போட்டியாளர்களைவிட பூட்ஸ்பேஸ் குறைவு உள்ளிட்ட சில நெகட்டிவ் அம்சங்களும் இருப்பதை மறுப்பதற்கில்லை. இந்த ஸ்கூட்டருக்கு 3 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது.
3. ஏத்தர் ரிஸ்டா
இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முன்னோடியாக விளங்கும் ஏத்தர் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுமே சிறந்த வரவேற்பை பெற்று வருகின்றன. ஆனால், பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டர் உள்ளது. பிற நிறுவனங்களைவிட ஏத்தர் நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிக நம்பிக்கையையும், பிரச்னைகள் குறைவாகவும் உள்ளன. தினசரி குடும்பத்தினரின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வசதியான இருக்கை அமைப்பு, அதிக ஸ்டோரேஜ், நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் Ather Grid சார்ஜிங் ஆதரவு ஆகியவை இது சிறந்த தேர்வாக உள்ளது. இதன் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 80,000 கிமீ தூரத்திற்கான வாரண்டி வேரியண்ட்டுகளை பொறுத்து பெற முடியும். நீண்ட கால அடிப்படையிலும் இது நிச்சயம் மதிப்பை தரும் மாடலாக கூறலாம்.
4. ஹீரோ விடா விஎக்ஸ்2
நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் விடா பிராண்டில் விற்பனையாகும் சிறந்த மாடல் விடா விஎக்ஸ்2 மாடலாக இருக்கிறது. போட்டியாளர்களைவிட விலை குறைவாக இருப்பதுடன், நகரப்பயன்பாட்டில் சிறப்பான கையாளுமை, போதுமான ரேஞ்ச் மற்றும் வேகமாக விஸ்தரிக்கப்படும் சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவை இதன் பலம். இந்த ஸ்கூட்டரின் பேட்டரிக்கு 5 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ தூரத்திற்கான வாரண்டி கொடுக்கப்படுகிறது. முதல் முறையாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.
5. ஹோண்டா ஆக்டிவா இ
இந்திய வாகன மார்க்கெட்டில் ஹோண்டாவின் தயாரிப்புகளுக்கு பொதுவாக அதிக மதிப்பு உண்டு. அந்த வகையில், ஹோண்டா இருசக்கர வாகனப் பிரிவு அறிமுகம் செய்த ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையான தேர்வாக கூறலாம். ஹோண்டாவின் சர்வீஸ் தரம், தரமான கட்டமைப்புத் தரம் மற்றும் பிராண்டு மீதான நம்பிக்கை ஆகியவை இந்த மாடலை முன்னிறுத்தும் அம்சங்களாக கூறலாம். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் லேட்டாக ஹோண்டா களமிறங்கினாலும், அதன் மீதான நம்பிக்கை நிச்சயமாக இதற்கு வலு சேர்க்கிறது. இதன் பேட்டரிக்கு 3 ஆண்டுகள் வாரண்டி கொடுக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
பொதுவாக மின்சார வாகனங்களில் பேட்டரி என்பது மிக முக்கிய விஷயமாக வாடிக்கையாளர்களால் கவனிக்கப்படுகிறது. அதன்படி, பஜாஜ் சேத்தக், ஏத்தர் ரிஸ்டா மற்றும் ஹீரோ விடா விஎக்ஸ்2 பேட்டரிகள் ஐபி-67 தரக் குறியீட்டுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. டிவிஎஸ் ஐக்யூப் பிஎம்எஸ் பாதுகாப்பு கவச தொழில்நுட்பத்திலும், ஹோண்டா ஆக்டிவா பேட்டரி தண்ணீர் மற்றும் தூசி தும்பட்டிகள் புகாத கட்டமைப்புத் தரத்திலும் உருவாக்கப்பட்டுள்ளன. பேட்டரியில் பிரச்னை ஏற்படும்பட்சத்தில், புதிய பேட்டரியை மாற்றுவதற்கு ரூ.35,000 முதல் ரூ.70,000 வரை செலவாகும் வாய்ப்பு இருக்கிறது.
எனவே, மேலே குறிப்பிட்ட மாடல்களில் ஒவ்வொன்றும் பல வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, டீலரில் புக்கிங் செய்வதற்கு முன்னதாக நீங்கள் வாங்கும் குறிப்பிட்ட வேரியண்ட்டின் வாரண்டி குறித்த விபரங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
அதேபோன்று, ரேஞ்ச் அல்லது டாப் ஸ்பீடை மட்டும் வைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்வது நல்லதல்ல. உங்கள் நகரத்தில் உள்ள சர்வீஸ் மையங்கள், உதிரிபாகங்கள் கிடைக்கும் வசதி, பேட்டரி வாரண்டி, சாப்ட்வேர் அப்டேட்டுகள் மற்றும் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவையின் தரம் ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டு வாங்கினால் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.