நந்தம்பாக்கம் - ஆலந்தூர், வடபழனி
நந்தம்பாக்கம் - ஆலந்தூர், வடபழனி - பனகல்பார்க் மெட்ரோ ரயில் வழித்தடத்தை 6 மாதங்களுக்குள் முடிக்க திட்டம்
இந்த வழித்தடத்தை இணைக்கும்போது முதல் கட்டத்தில் உள்ள பச்சை மற்றும் நீல வழித்தடத்துடன் மெட்ரோ சேவை விரிவுப்படுத்தப்படும். அதனால் தியாகராயநகர் செல்பவர்கள் எளிதில் சென்று வர முடியும்.
Published : October 13, 2026 at 11:00 PM IST
சென்னை: நந்தம்பாக்கம் முதல் ஆலந்தூர், வடபழனி முதல் பனகல்பார்க் வரையிலான வழித்தடத்தை 2027 மார்ச் மாதத்திற்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் நடைபெற்று வந்த பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நிறைவுற்றநிலையில், அதனை கடந்த 11 ஆம் தேதி பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.
'மஞ்சள் வழித்தடம்' என்றழைக்கப்படும் இந்த வழித்தடத்தில் மொத்தமாக 11 ரயில் நிலையங்கள் உள்ளன. மேலும், இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வந்த அன்றைய முதல் நாளில் மட்டும் 25,474 பயணிகள் பயணித்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டநிலையிலேயே இத்தனை பயணிகள் அந்த வழித்தடத்தில் பயணித்திருக்கின்றனர்.
இதேபோல், தற்போது மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் பாதையின் கட்டுமான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 47 கிமீ தூரம், 46 ரயில் நிலையங்களை உள்ளடக்கியதே இந்த வழித்தடம் ஆகும். இந்த பாதையின் பெரும் பகுதி மேம்பால பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆகையால் கட்டுமானப் பணிகள் எந்தவொரு தாமதமுமின்றி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மாதவரம், ரெட்டேரி, கொளத்தூர், அண்ணா நகர், கோயம்பேடு, விருகம்பாக்கம், வடபழனி , போரூர் வழியாக நந்தம்பாக்கம் வரையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்போது தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதிலும், கோயம்பேடு முதல் நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வரையிலான கட்டுமானப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாககவும், மீதமுள்ள பணிகளும் அதி விரைவாக நடைபெற்று வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில், நந்தம்பாக்கம் முதல் ஆலந்தூர், வடபழனி முதல் பனகல்பார்க் வரையிலான வழித்தடத்தை 2027 மார்ச் மாதத்திற்குள் (6 மாதத்தில் ) முடிப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.