குடிநீர் வழங்க கோரி ஓஎம்ஆரில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
குடிநீர் வழங்க கோரி ஓஎம்ஆரில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
திருப்போரூர்,அக்.14: திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காலவாக்கம் கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டு மனைப்பிரிவுகள் உள்ளன. கடந்த 10 நாட்களாக குழாய்களில் குடிநீர் வரவில்லை என்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று இரவு 7 மணிக்கு காலி குடங்களுடன் ஓ.எம்.ஆரில் மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சென்னையில் இருந்து திருப்போரூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் நோக்கி வந்த வாகனங்கள் ஒரு பக்கமும், அங்கிருந்து சென்னை நோக்கி சென்ற வாகனங்கள் மற்றொரு புறமும் வரிசை கட்டி நின்றன.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருப்போரூர் வட்டாட்சியர் வெங்கட்ரமணன், பேரூராட்சி தலைவர் தேவராஜ், காயார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருதப்பன், திருப்போரூர் எஸ்.ஐ.க்கள் கார்த்திகேயன், வினோத், சங்கர், கண்ணன் உள்ளிட்ட போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து உடனடியாக 2 லோடு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வழங்கப்படும் என்றும், தினமும் தண்ணீர் வழங்குவதை கண்காணிக்க உரிய பணியாளர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்போரூர் வட்டாட்சியர் வெங்கட்ரமணன், பேரூராட்சி தலைவர் தேவராஜ் ஆகியேர் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக சுமார் 1 மணி நேரம் ஓ.எம்.ஆரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.