பைக் சண்டையில் பிரிந்த அண்ணன்; 23 வருடம் கழித்து தம்பியோடு சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
பைக் சண்டையில் பிரிந்த அண்ணன்; 23 வருடம் கழித்து தம்பியோடு சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
"மகன் காணாமல் போனதில் இருந்து தூக்கமின்றி தவித்து வந்தேன். என்றாவது ஒருநாள் மகன் கிடைப்பான் என்ற நம்பிக்கையில் இருந்து வந்த நிலையில், தற்போது 23 ஆண்டுகள் கழித்து எனது மகன் எனக்கு மீண்டும் கிடைத்துள்ளான்"
Published : July 31, 2026 at 8:41 PM IST
-BY எஸ்.சீனிவாசன்
கோயம்புத்தூர்: யார் பைக்கை ஓட்டுவது என்ற விஷயத்தில் தம்பியுடன் ஏற்பட்ட சிறு தகராறால் 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய அண்ணனை, 23 வருடங்கள் கழித்து அவரது சகோதரன் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் காலமே சேர்த்து வைத்த விசித்திர நிகழ்வு கோவையில் அரங்கேறியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் பூமாலைப்பட்டி ஆனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி - சுந்தரி தம்பதியினர். இவர்களுக்கு பிரகாஷ், பிரபு என இரு மகன்கள் இருந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக இவர்கள் குடும்பத்துடன் கோவைக்கு குடிபெயர்ந்தனர்.
வாழ்க்கையை புரட்டிப்போட்ட சம்பவம்
கவுண்டம்பாளையம் பகுதியில் இவர்கள் வசித்து வந்த சூழலில், பிள்ளைகள் அரசு பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்த சூழலில், கடந்த 2003ஆம் ஆண்டு மூத்த மகன் பிரகாஷுக்கு 16 வயது இருக்கும்போது நடந்த ஒரு சாதாரண சம்பவம்தான் அவர்களின் வாழ்க்கையே புரட்டிப் போட்டது.
ஆம், தங்கள் தந்தையின் இருசக்கர வாகனத்தை யார் ஓட்டுவது என்ற விஷயத்தில் அண்ணன் - தம்பிகளான பிரகாஷ் - பிரபு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கோபம் காரணமாக, பிரகாஷ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
காணாமல் போன பிரகாஷை அவரது பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடினர். ஆனால், எங்கு தேடியும் பிரகாஷ் கிடைக்கவில்லை. காணாமல் போன மகன், எங்கு இருக்கிறானோ, என்ன செய்கிறானோ எனத் தெரியாமல் அவரது பெற்றோர் நடைபிணமாக வாழ்ந்து வந்துள்ளனர். என்றாவது தனது மகன் திரும்பி வந்துவிட மாட்டானா என ஏங்கிக்கிடந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
காலம் நிகழ்த்திய அதிசயம்
ஒருகட்டத்தில், இனியும் தனது மகன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என நினைத்த அவரது பெற்றோர், மனதை இரும்பாக்கிக் கொண்டு இளைய மகன் பிரபுவுடன் கோவை நீலாம்பூர் பகுதிக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தனர். காலங்கள் உருண்டோடின.
இந்நிலையில்தான், 23 வருடங்களுக்கு பிறகு விதி தனது அதிசயங்களை நிகழ்த்த தொடங்கியது. ஆம், சண்டிகர் தமிழ் சங்கம் மூலம் திருப்பூரை சார்ந்த செய்தியாளர் முத்தையா என்பவர் வாயிலாக பிரகாஷ் குறித்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு கிடைத்தது. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள லச்ச்கானி என்ற இடத்தில் இருக்கும் ஒரு காப்பகத்தில் அவர் இருப்பது தெரியவந்தது.
ஆனந்தக் கண்ணீர் வடித்த தம்பி
இறந்துவிட்டதாக நினைத்த தங்களுடைய மகன், உயிருடன் இருப்பதைக் கேட்டு இன்ப அதிர்ச்சியடைந்த தாயார் சுந்தரி, பஞ்சாப் சென்று தனது மகனை மீட்க உதவி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டனர். இதன் விளைவாக, தாயார் சுந்தரி, செய்தியாளர் முத்தையா ஆகியோர் பஞ்சாப் சென்று பிரகாஷை மீட்டு வந்தனர். 23 வயதில் வீட்டை விட்டு சென்ற தனது அண்னனை பார்த்ததும், தம்பி பிரபு கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார்.
தாயார் நெகிழ்ச்சி
தனது மகன் மீண்டும் கிடைத்ததால், ஏதோ உலகமே தன்வசம் வந்தது போன்ற மகிழ்ச்சியில் இருந்த தாயார் சுந்தரியிடம் நாம் பேசினோம். "வீட்டை விட்டு வெளியேறிய எனது மகன் ரயில் மூலம் பஞ்சாப் சென்றிருக்கிறான். அங்கு அவனை யாரோ ஒருவர் அழைத்துச் சென்று வீட்டில் கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கி உள்ளார்.
அங்கிருந்து தப்பிச் செல்லாமல் இருக்க பிரகாஷின் காலில் அவர்கள் சங்கிலியால் கட்டி வைத்து, ஒருவேளை மட்டுமே உணவு வழங்கி வந்துள்ளனர். இந்த சூழலில், தனியார் அமைப்பு அவனை மீட்டு 4 வருடங்களாக காப்பகத்தில் பராமரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அவர் தமிழ் பேசுவதை அறிந்த சண்டிகர் தமிழ் சங்க நிர்வாகிகள், பிரகாஷிடம் விசாரித்துள்ளனர். அப்போது சொந்த ஊர் விருதுநகர் என அவன் கூறவும், அங்கிருந்தவர்கள் மூலம் எங்கள் விலாசத்தை கண்டுபிடித்து என் வீட்டிற்கு வந்தனர்.
'நிம்மதியாக தூங்கினேன்'
இதன் தொடர்ச்சியாக எங்கள் மகனை நாங்கள் மீட்டு வந்திருக்கிறோம். மகன் காணாமல் போனதில் இருந்து தூக்கமின்றி தவித்து வந்தேன். என்றாவது ஒருநாள் மகன் கிடைப்பான் என்ற நம்பிக்கையில் இருந்து வந்த நிலையில், தற்போது 23 ஆண்டுகள் கழித்து எனது மகன் எனக்கு மீண்டும் கிடைத்துள்ளான்.
மூத்த மகன் பிரிவால் பல வருடங்களாக பெரும் துக்கத்தில் இருந்த நான், நேற்று இரவு எனது இரு மகன்களுடன் படுத்து உறங்கினேன். நிம்மதியான தூக்கம் நேற்றுதான் எனக்கு கிடைத்தது. இப்போது பேசுவதற்கு கொஞ்சம் சிரமப்படும் அவன், இன்னும் கொஞ்ச நாளில் சரியாகிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இன்று காலைதான் தோட்டத்திற்கு இளைய மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று காய்கறிகளை பறித்து வந்துள்ளான். எந்த இருசக்கர வாகனத்திற்காக வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியே சென்றானோ, அதே இருசக்கர வாகனத்தில் இருவரும் வந்தது எனக்கு பெரிய மகிழ்ச்சியை தந்தது.
மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றால், வீடு கட்டி கொடுத்தால் போதும். இரு மகன்களுடன் கடைசி வரை இருந்து விடுவேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.