பசுமை தமிழகத்துக்கான 4 வார செயல்திட்டம்: வீ த லீடர்ஸ் அமைப்பு வெளியிட்டது
சென்னை: ஆகஸ்ட் மாதத்தை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாதமாக வீ த லீடர்ஸ் அமைப்பு கடைப்பிடித்து வரும் நிலையில், பசுமை தமிழகத்துக்கான 4 வார செயல்திட்டங்களை இவ்வமைப்பு வெளியிட்டுள்ளது.
நாளைய பசுமையான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், இந்த ஆகஸ்ட் மாதத்தைச் ‘சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாதமாக’ அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது. வாரந்தோறும் ஒரு முக்கியக் கருப்பொருளின் கீழ் இந்தப் பிரச்சாரம் திட்டமிடப்பட்டுள்ளது.
எந்தவொரு மாற்றமும் தனி மனிதனிடமிருந்தே தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் முதல் வாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வீட்டைத் தூய்மையாகப் பராமரித்தல், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், மரக்கன்றுகளை நடுதல் மற்றும் நீர் சேமிப்பு போன்ற பணிகளில் குடும்ப உறுப்பினர்களை முழுமையாக ஈடுபடச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தங்கள் வசிப்பிடத்தைச் சுற்றியுள்ள தெருக்களைத் தூய்மையாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டு இரண்டாவது வாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தெருக்களில் தூய்மைப் பணி முகாம்களை நடத்துதல், உள்ளூர் மக்களை ஒன்றிணைத்துச் சுழற்சி முறையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற செயல்பாடுகள் இதில் இடம்பெற்றுள்ளன. மூன்றாவது வாரத்தில், சமுதாய அளவில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கில், கடற்கரைகள், சந்தைகள், பேருந்து நிலையங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும் பள்ளி, கல்லூரி வளாகத் தூய்மைப் பணிகள், மிதிவண்டி பேரணி மற்றும் பசுமை நடைப்பயணம் போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளும் இதில் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இறுதி வாரத்தில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடைமுறைத் தீர்வுகள் குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் மாதம் 4 வாரமும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, சுத்தமான மற்றும் பசுமையான சமுதாயத்தைப் படைக்க ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.