📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 18, 2026 10:31 PM

பெண் கல்வியை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

பெண் கல்வியை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

பெண் கல்வியை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஜவ்வாதுமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு நிலப்பட்டா மற்றும் தரமான கல்வி வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் அரசு ஈடுபட்டு வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

Published : July 18, 2026 at 10:15 PM IST

திருவண்ணாமலை: பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் அமைந்துள்ள ஜமுனாமரத்தூரில் 26-வது கோடை விழா இன்று (ஜூலை 18) தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலர் கண்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது.

இவ்விழாவில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கோடை விழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, மலர் கண்காட்சி மற்றும் அனைத்து துறைகளின் பணி விளக்கக் கண்காட்சி அரங்குகளையும் திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, ரூ. 65 கோடியே 66 லட்சம் மதிப்பில் நிறைவடைந்த பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர்கள் திறந்து வைத்தனர். மேலும், ரூ.111 கோடியே 25 லட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை 27 ஆயிரத்து 532 பயனாளிகளுக்கு வழங்கினர். இதில் கல்வி, சமூக நலன், வாழ்வாதார மேம்பாடு, விவசாயம், மகளிர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உதவிகள் இடம் பெற்றிருந்தன.

விழாவில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தமிழக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, பெண் கல்வியை ஊக்குவிப்பது அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு கல்வி ஊக்கத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "சமுதாயத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இளைஞர்களை நல்ல பாதைக்கு வழிநடத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

ஜவ்வாதுமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு நிலப்பட்டா வழங்குதல், தரமான கல்வி, மருத்துவ வசதிகள், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது" என தெரிவித்தார்.