📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 18, 2026 04:03 AM

பென்கூலன் பள்ளிவாசல்: சிங்கப்பூரின் 200 ஆண்டு வரலாற்றுப் பயணம்

பென்கூலன் பள்ளிவாசல்: சிங்கப்பூரின் 200 ஆண்டு வரலாற்றுப் பயணம்

சிங்கப்பூரின் பழைமையான வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான பென்கூலன் பள்ளிவாசல், தனது 200வது ஆண்டு நிறைவுவிழாவை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) கோலாகலமாகக் கொண்டாடுகிறது.

சமூகத் தலைவர்கள், சமயப் பெரியோர்கள், பள்ளிவாசலின் நலவிரும்பிகள் என ஏறத்தாழ 520 பேர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கவுள்ளனர்.

கூரைக்கூடத்திலிருந்து கட்டடமாக உருமாற்றம்

1825ஆம் ஆண்டில் சுமத்ராவின் பென்குலு பகுதியிலிருந்து வந்த வணிகர்களாலும் குடியேறிகளாலும் ஓர் அத்தாப்புக் குடிலாக முதலில் இப்பள்ளிவாசல் நிறுவப்பட்டது.

பின்னர் 1845ல், புகழ்பெற்ற அரபு வணிகரான சையத் உமர் அல்ஜுனிட் அவர்களின் நிதியுதவியுடன் பள்ளிவாசல் நிரந்தரச் செங்கல் கட்டடமாக உயர்த்தப்பட்டது.

காலனித்துவக் காலம், இரண்டாம் உலகப் போரையடுத்து ஜப்பானிய ஆக்கிரமிப்பு, சிங்கப்பூரின் சுதந்திரப் பயணம் என நாட்டின் எண்ணற்ற வரலாற்று மாற்றங்களையும் சவால்களையும் தாண்டியும் பென்கூலன் பள்ளிவாசல் உறுதியோடு நிலைத்து நின்றிருக்கிறது.

தொடக்கத்தில் எளிய வழிபாட்டுக் கூடமாக அடியெடுத்து வைத்த இப்பள்ளிவாசல், காலப்போக்கில் ஆன்மிகத்தைத் தாண்டி, சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப் பண்பாட்டு மையமாக உருவெடுத்தது.

பள்ளிவாசலின் வளர்ச்சியும் புதிய முயற்சிகளும்

1968ஆம் ஆண்டில், பென்கூலன் பள்ளிவாசல் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றத்தின் (முயிஸ்) நேரடி நிர்வாகத்தின்கீழ் வந்தது. சிங்கப்பூரிலுள்ள மூன்று ‘ஹனஃபி’ மரபுப் பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்று.

காலத்திற்கேற்ப தன்னைத் தொடர்ந்து தகவமைத்துக் கொண்ட இப்பள்ளிவாசல், 2002ஆம் மற்றும் 2004ஆம் ஆண்டுகளுக்கு இடையே தனது நிலத்தில் முன்னோடி ‘வக்ஃப்’ மறுமேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தியது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

‘முஷாரகா’, ‘இஜாரா’ எனும் இஸ்லாமிய நிதி மாதிரிகள், சுகூக் கடன் பத்திரங்கள் மூலம் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் வழியாக, வழிபாட்டுத் தலமும் ‘சாமர்செட் பென்கூலன்’ வணிக-குடியிருப்பு வளாகமும் ஒருங்கிணைக்கப்பட்டன.

இதன்மூலம் வணிக ரீதியிலான வருமானம் திரட்டப்பட்டு, பள்ளிவாசலின் அன்றாடச் செயல்பாடுகளுக்கும் பராமரிப்பிற்கும் தேவையான நிதியைத் தற்சார்புடன் ஈட்ட வழிவகுக்கப்பட்டது

பெருகிய இறையன்பர்கள்

2005 முதல் பள்ளிவாசலைச் சுற்றியுள்ளப் பகுதியில் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், லாசால் கலைக் கல்லூரி, சிங்கப்பூர் கலைப்பள்ளி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. மாணவர்கள், பேராசிரியர்கள், தொழிற்துறை சார்ந்த இளையர்களின் வருகை அதிகரித்தது.

அதனைத் தொடர்ந்து, 2017ஆம் ஆண்டில் பென்கூலன் ரயில் நிலையம் திறக்கப்பட்டு பள்ளிவாசலோடு நேரடியாக இணைக்கப்பட்டதால் இறையன்பர்கள் எளிதாக வந்துசெல்லும் வசதி மேம்பட்டது.

இறையன்பர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கூடியதால் தொழுகைக்கான இடம் போதவில்லை. அதன் காரணமாக, பள்ளிவாசல் நிர்வாகக் குழு, இஸ்லாமியச் சமய மன்றத்துடன் இணைந்து ஆலோசித்து பிரம்மாண்ட மறுசீரமைப்புத் திட்டத்தை முன்னெடுத்தது.

அதன்படி, 2019 முதல் 2023 வரை மேற்கொள்ளப்பட்ட $4 மில்லியன் மதிப்பிலான பிரம்மாண்ட மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, 2024ல் பள்ளிவாசல் மீண்டும் கோலாகலமாகத் திறக்கப்பட்டது

மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகள்

இப்புதிய மறுசீரமைப்பின் மூலம் பள்ளிவாசலின் தொழுகை வசதி 450லிருந்து 1,200 முதல் 1,450 பேர்வரை தொழக்கூடிய வகையில் மும்மடங்காகப் பெருக்கப்பட்டது. தரைத்தளம் முதல் மூன்றாம் தளம் வரை வழிபாட்டு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெண்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, அவர்களுக்காக நவீன வசதிகளுடன் கூடிய தனித் தொழுகைக் கூடங்கள், கழிப்பறைகள், உடை மாற்றும் வசதிகள் அமைக்கப்பட்டன.

முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் பள்ளிவாசலுக்கு எளிதாக வந்துசெல்ல மின்தூக்கி, சக்கர நாற்காலிப் பாதை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பல முயற்சிகளை முன்னெடுத்து இரு நூற்றாண்டுகளாக கல்விக்கும் சேவைக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து வருகிறது பென்கூலன் பள்ளிவாசல். வெள்ளிக்கிழமைகளில் தமிழ் மொழியில் குத்பா உரைகளும் சமய வகுப்புகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஒரு சில சிங்கப்பூர் பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்று.

“வரலாற்றுச் சிறப்புமிக்க 200வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், இரண்டு நூற்றாண்டுகளாகச் சேவையாற்றிய முன்னோடிகள், இமாம்கள், தொண்டர்கள் ஆகியோரின் அளப்பரிய அர்ப்பணிப்பையும் பென்கூலன் பள்ளிவாசல் நினைவுகூர்கிறது; அவர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது,” என்று பென்கூலன் பள்ளிவாசலின் தலைவர் ஹாஜி மு. யூ. முகம்மது ரஃபீக், 61, பெருமிதத்துடன் கூறினார்.