பெட்ரோல் பங்க்குகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுத்தம்? டீலர்கள் சங்கம் தகவல்
சென்னை: ''தமிழகம் முழுதும் பெட்ரோல் பங்க்குகளில், டிஜிட்டல் முறையில் பணம் வசூலிப்பதை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கும் நிலை ஏற்படும்,' என, தமிழக பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சங்க தலைவர் முரளி கூறியதாவது: தமிழகத்தில், 7,000 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இவற்றில் சராசரியாக தினமும், 40 சதவீதம், 'கிரெடிட், டெபிட் கார்டுகள், கூகுள் பே' உள்ளிட்ட, 'டிஜிட்டல்' முறையிலும், மீதி ரொக்க பணம் வாயிலாகவும் விற்பனை நடக்கிறது.
டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு அது எப்படி வந்தது என்ற விபரம், பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
சட்ட விரோத பணப் பரிமாற்றங்களில் ஈடுபடும் நபர்களை, 'சைபர் கிரைம்' அதிகாரிகள் விசாரிக்கும்போது, டீலர்களையும் அழைத்து விசாரிக்கின்றனர்.
இதனால், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சைபர் கிரைம் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை சுட்டிக்காட்டி, வங்கிகள், டீலர்களின் வங்கி கணக்குகளை முடக்குவதால், வியாபாரம் முடங்குகிறது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்காக, டீலர்களை அலைக்கழிப்பதும், கணக்கு முடக்கத்தையும் சந்திக்க நேரிட்டால், அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் டிஜிட்டல் முறை பண வசூலை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.
டீலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முன், குறிப்பிட்ட பரிவர்த்தனை தொடர்பான விபரங்களை எழுத்துப்பூர்வமாக வழங்கி, முறையான விசாரணை நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, டிஜிட்டல் பண பரிவர்த்தனை பிரச்னைகள் குறித்து விசாரிக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.