📅 Thursday, 26 November 2026 IST | கார்த்திகை 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health November 26, 2026 02:04 AM

பி.எப்., கணக்கில் கூடுதல் டிபாசிட் செய்யும் வசதி: இ.பி.எப்.ஓ., அமைப்பின் பரிசீலனையில் புதிய திட்டம்

பி.எப்., கணக்கில் கூடுதல் டிபாசிட் செய்யும் வசதி: இ.பி.எப்.ஓ., அமைப்பின் பரிசீலனையில் புதிய திட்டம்

தொழிலாளர்கள் தங்கள் பி.எப்., கணக்கில், இனி தாங்களாக கூடுதல் தொகையை டிபாசிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்த இ.பி.எப்.ஓ., அமைப்பு திட்டமிட்டுள்ளது.

தற்போது ஊதியத்தில் நிறுவனமும் தொழிலாளரும் தலா 12 சதவீதத்தை பி.எப்., கணக்கில் செலுத்தி வருகின்றனர். தொழிலாளர் விரும்பினாலும், தனது பி.எப்., கணக்கில் நிறுவனத்தின் வாயிலாக மட்டுமே கூடுதலாக டிபாசிட் செய்யும் நடைமுறை தற்போது உள்ளது.

இதற்கு பல நிறுவனங்கள் தற்போது வாய்ப்பு அளிக்காத சூழலும் உள்ளது. அதிக மற்றும் பாதுகாப்பான வட்டி வருவாய் தரும் பி.எப்., கணக்கில் கூடுதல் டிபாசிட் செய்ய விரும்பும் தொழிலாளர்களுக்கு பெரும்பாலும் இந்த வாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது.

இதை மாற்றும் வகையில், தொழிலாளரின் பி.எப்., கணக்கில் தனது யு.ஏ.என்., எனப்படும் பிரத்யேக அடையாள எண்ணை கொண்டு, நிறுவனத்தின் உதவி இல்லாமல், கூடுதல் தொகையை டிபாசிட் செய்து கொள்ளும் வசதியை வழங்க இ.பி.எப்.ஓ., பரிசீலித்து வருகிறது.

இதன் வாயிலாக, மற்ற பாதுகாப்பற்ற முதலீடுகளை தவிர்த்து, பி.எப்., கணக்கில் கூடுதல் வட்டி பெறும் வகையில் டிபாசிட் செய்ய தொழிலாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதனால், தங்கள் ஓய்வு கால பாதுகாப்பு நிதியை அதிகரித்து கொள்ள இயலும்.

மேலும், உணவு விநியோகம் மற்றும் ஆன்லைன் சேவைகளில் ஈடுபடும் பகுதிநேர தொழிலாளர்கள் மற்றும் ப்ரீலேன்சர்கள் பெறும் டிப்ஸ் தொகையை நேரடியாக அவர்களது பி.எப்., கணக்கில் வரவு வைக்கும் வசதியையும் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பி.எப்., தொகைக்கு 2025- – 26 நிதியாண்டில் 8.25 சதவீத வட்டி வழங்கப்பட்டுள்ளது.

இ.பி.எப்.ஓ.,வின் இந்த திட்டத்துக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக இறுதி ஒப்புதல் கிடைத்த பிறகே இது அமலுக்கு வரும்.

தொழிலாளர் நேரடியாக செலுத்தும் இந்த கூடுதல் தொகைக்கும், வட்டிக்கும் வருமான வரி விலக்கு கிடைக்குமா என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.