பாலஸ்டியர் மார்க்கெட் மறுசீரமைப்பு: நில ஆணையம் அறிவிப்பு
https://www.straitstimes.com/singapore/balestier-market-set-for-makeover-with-new-dining-retail-options-grocer-space
பாலஸ்டியர் ரோட்டில் நூற்றாண்டையும் கடந்து இயங்கும் பாலஸ்டியர் மார்க்கெட் வளாகம் அதிநவீனமான மேம்பாடுகளுடன் மறுவடிவமைக்கப்படும் என்று சிங்கப்பூர் நில ஆணையம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) அதன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
அதற்கான ஒப்பந்தக் குத்தகை ஹுவா ஹங் டிரேடிங் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதையும் ஆணையம் தெரிவித்தது. அரசாங்கத்துக்குச் சொந்தமான அந்த நிலம் எண் 411 பாலஸ்டியர் ரோடு என்ற முகவரியில் உள்ளது.
அந்த உணவக வளாகம் 1922ஆம் ஆண்டில் தோற்றம் கண்டது. வரலாறும் மரபும் பிணைந்த அவ்விடத்தை நவீனமாக பற்பல புதிய வழிகளில் புதுப்பிக்கும் திட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
பலவித உணவுகளை வழங்குவதோடு சில்லறை வர்த்தகங்களும் அங்கு அமைக்கப்படும். பாரம்பரிய ஈரச்சந்தையும் மளிகைக் கடைகளும் ஒருங்கே அங்கு இருக்கும்.
மத்தியப் பகுதியில் மக்கள் உணவு அருந்தும் இடமும் சொந்தமாகப் பானங்களைத் தயாரித்துக்கொள்ளும் பகுதியும், வெளிப்புறத்தில் புத்துணர்வூட்டும் வகையில் கடைகளும் புதிய தயாரிப்புகளையும் விளைபொருள்களையும் வாங்க ஏற்பாடு செய்யப்படும்.
“உணவுண்பது, கடைகளில் பொருள்கள் வாங்குவது போன்றவற்றோடு அவ்விடத்தின் வரலாற்றையும் அடையாளத்தையும் கொண்டாடும் வகையில் அடிக்கடி நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அவற்றின் வழியாக குடியிருப்பாளர்கள் ஒன்றிணையும் வாய்ப்புகள் அமையும்,” என்று ஆணையம் அதன் பதிவில் விளக்கியது.
ஃபேஸ்புக்கில் ஹுவா ஹங் வெளியிட்ட மாதிரி வடிவமைப்பில் உணவு உண்ணும் பகுதி பழைய கடைவீடுகளை நினைவூட்டியது. சமைத்த உணவுக் கடைகள் மாடிவீட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன. உணவு உண்ணும் மையப்பகுதியின் அருகில் இரு பானங்கள் விற்கும் கடைகள் காணப்பட்டன. அவை மதுபானத்துக்கும் வழக்கமான பானங்களுக்குமான இரு வேறு கடைகள் ஆகும்.
மாதிரி வடிவமைப்பின் மற்றொரு படத்தில் பழங்கள், கடல்உணவு போன்றவற்றுக்கான பல கடைகள் காட்டப்பட்டுள்ளன.
ஒரு கறுப்புப் பாலத்தின் மேல் ஒர்கியோ என்ற பெயர்பலகை அந்த மாதிரி வடிவங்களில் உள்ளது. வரலாற்றின்படி, அப்பெயர்தான் ஆரம்பத்தில் அந்த சந்தைக்குச் சூட்டப்பட்டிருந்தது.
‘ஓர் கியோ பா சாட்’ என்று அது அன்னாளில் அழைக்கப்பட்டது. கறுப்புப் பாலச் சந்தை என்று சீன மொழியில் அது பொருள்படும். அவ்விடம் ‘டீ பா சாட்’ (இரும்புச் சந்தை) எனவும் வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் அச்சந்தையைச் சுற்றி இரும்புவேலி சூழ்ந்திருந்ததால் அப்பெயரை அது பெற்றது. அந்த மரபுகளை புதி வடிவமைப்பு பிரதிபலிக்கும் என்று ஆணையம் தெரிவித்தது.