பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தால் ரூ.2 லட்சம் கோடி வர்த்தக வாய்ப்பு
திருப்பூர்: ''இந்தியா - பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, கூடுதலாக 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய வர்த்தக வாய்ப்பு உருவாகும்,'' என தொழில் வல்லுனர்கள் கூறினர்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம், உலக நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக உறவு வேகமாக விரிவடைந்து வருகிறது.
ஐரோப்பிய ஒப்பந்தம் உருவாகும்போது, உலக மக்கள் தொகையில், 90 சதவீத பங்களிப்புள்ள நாடுகளுடன் வர்த்தக உறவு வலுப்பெறும்; அமெரிக்காவுடனும் ஒப்பந்தம் ஏற்பட்டால், உலக சந்தையில் 80 சதவீத அளவுக்கு இந்திய பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என, தொழில் வல்லுனர்கள் தெரிவித்தனர்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) சார்பில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் வாய்ப்புகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள், மும்பை, சூரத், லுாதியானாவை தொடர்ந்து, திருப்பூரிலும் நடந்தது.
'சிம்போசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்' சர்வதேச வர்த்தகத்துறை பேராசிரியர் சஞ்சய் குமார் மங்களா கூறுகையில், “பிரிட்டன் ஒப்பந்தம் வாயிலாக, கூடுதலாக 2 லட்சம் கோடி ரூபாய் புதிய வர்த்தக வாய்ப்பு உருவாகும்.
ஆசிய மற்றும் பசிபிக் நாடுகள் 5.26 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்கின்றன; அந்தச் சந்தைகளிலும் இந்தியாவுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. ''வர்த்தக ஒப்பந்தம் மூலம் வாய்ப்பு கிடைப்பது மட்டும் போதாது; வெளிநாட்டு சந்தைகளில் இந்திய பொருட்களை நிலைநிறுத்தி, வர்த்தகத்தை பெருக்க ஏற்றுமதியாளர்கள் முழு அளவில் தயாராக வேண்டும்,” என்றார்.
2025ம் ஆண்டு ஆடை இறக்குமதி - ரூ.46.74 லட்சம் கோடி