📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 22, 2026 03:33 PM

பிரகாஷ் ராஜ் முதல் பா. ரஞ்சித் வரை

பிரகாஷ் ராஜ் முதல் பா. ரஞ்சித் வரை

பிரகாஷ் ராஜ் முதல் பா. ரஞ்சித் வரை - சி.ஜே.பி போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு குரல்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமைச் செயலக நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட ராப் பாடகர் தெருக்குரல் அறிவை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Published : July 22, 2026 at 11:10 AM IST

சென்னை: டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்ற நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சி.ஜே.பி) போராட்டம் நடத்தி வருகின்றனர். முக்கியமாக, தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம், சென்னை வரை பரவி, நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை (ஜூலை 20) ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அப்போது டெல்லி காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் இணைந்து பேரணி செல்ல முயன்றவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டு வீசியும் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் பல மாணவர்களும், காவல்துறையினர் சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டன.

மேலும், ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பல பகுதிகளில் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் தலைநகரில் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், சி.ஜே.பி போராட்டத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், பிரகாஷ் ராஜ், மூத்த நடிகை ஷபானா அஸ்மி ஆகிய நடிகர்களும் மாணவர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் நடிகர்கள் சோனு சூட், ரிதேஷ் தேஷ்முக், ஜெனிலியா, சித்தார்த், ரேவதி, அதிதி ராவ், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

In solidarity with #SonamWangchuk, the #CockroachJantaParty and every protester at #JantarMantar Condemnation against the state’s intervention in the peaceful protest at Jantar Mantar. The use of force against protesters, the detention of those standing in solidarity, and the… pic.twitter.com/03Yn7Ur6Zj

இது குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜந்தர் மந்தரில் அமைதியாக போராடி வரும் மாணவர்களுக்கு எதிராக அரசின் அடக்குமுறையை கண்டிக்கிறோம். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும், ஆதரவு கொடுத்த ஒவ்வொருவரும் தடுக்கப்பட்டதும், 21 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதும் கவலையளிக்கின்றன" என பதிவிட்டுள்ளார்.

The Education Minister will not be sacked because the Govt doesn’t want to set a precedent of yielding to protests. They’ve methodically and meticulously built a brand of authority & strength and will never risk appearing weak. If a head rolls today, many more will roll tomorrow.

அதே போல் நடிகர் சித்தார்த் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “போராட்டங்களுக்கு பணிந்து போகும் முன்னுதாரணத்தை உருவாக்க அரசு விரும்பாததால், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படமாட்டார். அவர்கள் தங்களது அதிகாரத்தையும், வலிமையையும் மிகுந்த திட்டமிடலுடனும், கவனத்துடனும் உருவாக்கியுள்ளனர். அதனால் பலவீனமானவர்களாக தெரிவதை அவர்கள் தவிர்க்கவே விரும்புவார்கள். இன்று ஒருவரது பதவி பறிபோனால், நாளை பலரது பதவி பறிபோகும் நிலை ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகை அதிதி ராவ் ஹைதரி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொருவருக்கும் அரசியல் விருப்பங்கள் வேறுபட்டு இருந்தாலும், அவற்றிற்கு மேலாக மனிதாபிமானமே முதன்மையாக இருக்க வேண்டும்.

ஆக்கப்பூர்வமான உரையாடலுக்கு உண்மையாக இருக்க வேண்டும். மாணவர்கள் கோரிக்கைகள் அரசால் பரிசீலிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் மரியாதை, கண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு பாதுகாப்பான சூழலை நாம் உறுதி செய்ய வேண்டும். நமது மாணவர்களே நாட்டின் எதிர்காலம்” என குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முறைகேடுகளுக்கு எதிராக தில்லியில் பெருந்திரளாகப் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்; போராடும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி…

இதனிடையே நேற்று நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் ராப் பாடகர் தெருக்குரல் அறிவு சென்னை தலைமைச் செயலக நுழைவு வாயில் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், பாடகர் அறிவை தலைமைச் செயலகத்திற்குள் அழைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், நாடு முழுவதும் திரைக் கலைஞர்கள் பலர் சி.ஜே.பி கட்சியினரின் போராட்டத்திற்கு ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர்.