📅 Thursday, 06 August 2026 IST | ஆடி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 06, 2026 04:30 AM

பல்கலைக்கழகப் பயணத்தில் மிளிர்ந்த தலைமைத்துவம்

பல்கலைக்கழகப் பயணத்தில் மிளிர்ந்த தலைமைத்துவம்

பல்கலைக்கழகப் பயணம் என்பது வெறும் பட்டப்படிப்போடு முடிந்துவிடுவதில்லை. தலைமைத்துவப் பண்புகளைப் பட்டை தீட்டிக்கொள்ளும் பொன்னான காலமாகவும் அமைகிறது.

இதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் ஆன் சாஃப்ரின் அலெக்ஸ் சத்யன், 23.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்புகள் துறையில் இளநிலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள இவர், கல்வியைத் தாண்டிச் சமூக சேவை, மாணவ அமைப்புகளில் தலைமைத்துவப் பொறுப்புகள் எனப் பல தளங்களில் தடம்பதித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் மலர்ந்த தலைமைத்துவம்

பல்கலைக்கழகத்தின் முதலாண்டில் ‘புரோஜெக்ட் தூண் IV’ (Project Thoon IV) திட்டத்தில் தொண்டூழியராகத் தம் பயணத்தைத் தொடங்கிய சாஃப்ரின், அடுத்த ஆண்டிலேயே அத்திட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களுக்குக் கலை சார்ந்த பயிற்சிகளை வழங்கி வந்தது இத்திட்டம்.

2023 முதல் 2024 வரை ‘தமிழா’ அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்த சாஃப்ரின், ஐந்தாண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ‘அத்தியாயம்’ எனும் நாடகத் தயாரிப்பை மீண்டும் மேடையேற்றினார்.

“முழுமையாக மாணவர்களால் நடத்தப்படும் அமைப்புகளில் வழிகாட்டிகள் இல்லை என்பதால், தவறுகளிலிருந்தே அனுபவம் பெற்றோம். ‘வானமே எல்லை’ எனும் அளவுக்குப் புதிய யோசனைகளைச் செயல்படுத்த முடிந்தது,” எனப் பூரிப்போடு நினைவுகூர்ந்தார் சாஃப்ரின்.

மேலும், பல்கலைக்கழக ஒளிபரப்பு, கேளிக்கை அமைப்பின் துணைத் தலைவராகவும் செயல்பட்டுத் தம் திறமைகளை இவர் மெருகேற்றிக்கொண்டார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அனைத்துலக அனுபவமும் தொடரும் சமூக சேவையும்

தாய்லாந்தில் நடைபெற்ற ‘சேஞ்ச்மேக்கர்ஸ்’ (Changemakers) திட்டத்தில் பங்கேற்றது, சாஃப்ரின் சமூக சேவையை அணுகும் முறையை மாற்றியமைத்தது.

வெவ்வேறு துறைகளையும் பின்னணிகளையும் சேர்ந்த இளம் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டதன் மூலம், பல புதிய கண்ணோட்டங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

பல்கலைக்கழகப் படிப்பை முடித்த பின்னரும், மக்கள் கழக இளையர் இயக்கத்தின் (PAYM) கம்போங் சாய் சீ இளையர் கட்டமைப்பில் உறுப்பினராக இணைந்து, இவர் தொடர்ந்து சமூகத்திற்குப் பங்காற்றி வருகிறார். இளையர்களின் மனநல மேம்பாடு, தன்னம்பிக்கை வளர்த்தல், தொழில் வழிகாட்டுதல் திட்டங்களுக்கு இவர் ஏற்பாடு செய்துள்ளார்.

துறையில் கைகொடுத்த திறன்கள்

தொடக்கத்தில் தகவல் அமைப்புகள் பட்டப்படிப்பில் பெரிய ஈடுபாடு இல்லையென்றாலும், நாளடைவில் மென்பொருள் திட்ட மேலாண்மை துறைமீது சாஃப்ரினுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

தலைமைத்துவ வாய்ப்புகள் மூலம் தாம் கற்றுக்கொண்ட திறன்களையும் கூர்மையாகச் சிந்திக்கும் போக்கையும் மென்பொருள் திட்ட மேலாண்மையில் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என இவர் நம்புகிறார்.

“அதிகமாகச் சிந்தித்துத் தயங்காமல், துணிந்து முதல் அடியை எடுத்து வைத்தால் வாய்ப்புகள் நம்வசமாகும்,” என்ற தன்னம்பிக்கையோடு தொடர்ந்து சமூகத்திற்குப் பங்காற்ற விழைகிறார் சாஃப்ரின்.