📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 29, 2026 04:03 PM

பல்லாவரம் அருகே விசிக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது

பல்லாவரம் அருகே விசிக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது

பல்லாவரம் அருகே விசிக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு நண்பர்களாக இருந்த அன்பழகனும், வீனஸும் நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து, பொதுமக்களை மிரட்டுதல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Published : August 29, 2026 at 1:58 PM IST

சென்னை: பல்லாவரம் அருகே விசிக பிரமுகர் அன்பழகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழில் போட்டி காரணமான வீனஸ் என்பவர் தலைமையிலான கூலிப்படையினர் இந்த கொலையை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்ற மைனாக் குட்டி விசிக தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். இவர் நேற்று (ஆகஸ்ட் 28) மதியம் திருநீர்மலை அம்பேத்கர் சிலை அருகேயுள்ள திமுக மண்டல அலுவலகம் அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, 3 இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அன்பழகனை சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் அன்பழகன் உயிரிழந்த நிலையில், அவரது உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட அன்பழகன் மீது 3 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க சங்கர் நகர் போலீசார் 5 தனிப்படைகள் அமைத்ததோடு, சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கொலை குற்றவாளிகள் சங்கர் நகர் அருகேயுள்ள கல்குவாரியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று 7 பேரை சுற்றி வளைத்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த வீனஸ் என்கிற பாலசந்தர் (48), மறைமலை நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (23), காஞ்சிபுரத்தை சேர்ந்த விமல் (26), நெடுங்குன்றத்தை சேர்த்த முகேஷ் கண்ணன் (24), குரோம்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் (29), பல்லாவரத்தை சேர்ந்த விஷ்ணுகுமார் (21), மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திகயேன் (23) என தெரியவந்தது.

இந்த நிலையில், குறுகிய காலத்தில் அன்பழகனின் வளர்ச்சியை பார்த்து வீனஸுக்கு பொறாமை ஏற்பட்டதாகவும், இதனால் அவர்களுக்குள் தொழில் போட்டி ஏற்பட்டதாகவும் தெரிகிறது. அதன் விளைவாக நேற்று (ஆகஸ்ட் 28) வீனஸ் தலைமையிலான கும்பல், அன்பழகனை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது வரை 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தொழில் போட்டி தவிர வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? வேறு யாருக்கும் இந்த கொலையில் தொடர்ப்புள்ளதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.