📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 19, 2026 06:34 PM

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

சதுப்பு நிலத்தை காப்பாற்றினால்தான் எதிர்காலத்தில் மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் என அன்புமணி ராமதாஸ் எச்சரித்தார்.

Published : July 19, 2026 at 5:10 PM IST

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும் பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் கடைவீதியில் பசுமை தாயகம் சார்பில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை காப்பதற்கான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கத்தில் அன்புமணி ராமதாஸ், சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆகியோர் கலந்துகொண்டு கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து பாண்டி பஜாரில் உள்ள கடைகள் ஒவ்வொன்றாக சென்ற அன்புமணி ராமதாஸ் பொதுமக்களுக்கு சதுப்பு நில பாதுகாப்பு அவசியம் குறித்த நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்சியில் பேசிய சௌமியா அன்புமணி, "பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்பது முக்கியத்துவம் பெற காரணம் தண்ணீர் பிரச்சனைதான். சென்னை மிகப்பெரிய நகரம். ஒரு கோடி பேர் இங்கு இருக்கிறார்கள். கூவம் ஆற்று தண்ணீரை குடிக்க முடியாது. சென்னையில் 3 ஆறுகள் இருந்தும் தண்ணீர் கிடையாது. சென்னையில் ஏரி, குளம் கிடையாது. ஏரி, குளம் இருந்த இடங்களில் அரசே குடியிருப்பை கட்டி விட்டார்கள்.

எனவே சதுப்பு நிலம்தான் மழைநீரை உறிஞ்சும் ஸ்பான்சு. சதுப்பு நிலம் இருந்தால் தான் நிலத்தடி நீர் இருக்கும். குழாயை திறந்தால் தண்ணீர் வர வேண்டும் என்றால் சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் தென் சென்னையே வறண்டு விடும். சதுப்பு நிலத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கை செய்ய வேண்டும். நல்ல தண்ணீரை விட்டு விட்டு உப்பு நீரை நன்னீராக்கி குடிக்கிறோம். அதற்கு எவ்வளவு செலவு ஆகும். கழிவு நீரையும் சுத்தம் செய்து பயன்படுத்தும் அவலநிலை வரவேண்டாம். சதுப்பு நிலத்தை காப்பாற்றினால்தான் தண்ணீர் கிடைக்கும்" என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், "சென்னையில் உயிர்நாடி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பசுமை தாயகத்தின் சர்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. சென்னைக்கு 4 வரங்களை இயற்கை கொடுத்துள்ளது. அடையாறு ஆறு, கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம். 3 ஆறும் சென்னைக்கு தண்ணீரை கொண்டு வருகிறது. அந்த 4 வது வரம் அந்த நீரை தேக்கி வைக்கிறது.

இதையும் படிங்க: ஆக.4 இல் வைகோ நூல் வெளியீட்டு விழா; ராகுல் காந்தி வெளியிட முதல் பிரதியை பெறுகிறார் முதல்வர் விஜய்

சென்னையின் மழைநீர் வடிகால்பகுதியாக பள்ளிக்கரணை உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 15 ஆயிரம் ஏக்கர் இருந்தது. அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக விவசாயம் செய்தனர். பின்னர் வீடுகளாக வந்துவிட்டது. தற்போது 15 ஆயிரம் ஏக்கரில் இருந்து 2500 ஏக்கருக்கு வந்துவிட்டது. அதையும் அழிக்க கிரடாய் போன்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நிறுவனங்கள் சூழ்ச்சி செய்து வருகிறது. வேடந்தாங்கல் விட 4 மடங்கு அதிக பறவை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வருகிறது. அதை அழிக்க வேண்டும் ஒழிக்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறார்கள்.

சென்னை தொழில்நுட்ப நகரமான ஓஎம்ஆர், சதுப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை போன்று மேலும் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாம் அதற்கு விடக்கூடாது. அது உங்கள் பிள்ளைகள், வருங்கால சந்ததிகள் சென்னையில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும். 2015-யில் தியாகராயநகர் பகுதியில் இதே தெருவில் நான் பரிசலில் சென்றேன். மழைநீர் தேங்கி நின்றதற்கு காரணம் , பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழித்ததால் தண்ணீர் அங்கு செல்ல முடியவில்லை. சென்னைக்கு வெள்ளம் வரக்கூடாது என்றால் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட வேண்டும்.

வேளச்சேரி மொத்தமும் சதுப்பு நிலம். அதனால்தான் மழை காலங்களில் பாலங்களில் வாகனம் நிறுத்தும் நிலை உள்ளது. கடந்த கால ஆட்சியாளர்களால் நொந்து போய்விட்டோம். தமிழகத்தில் உள்ள 26,800 ஈர நிலத்தை (wet land) மறுஅறிவிக்கை செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள ஈர நில ஆணையம் தூங்கி கொண்டுள்ளது.

சதுப்பு நிலத்தை வரையறை செய்து அறிவித்தால் அதை ஆக்கிரமிக்க முடியாது. இதை தமிழ்நாடு அரசு முதல் கட்டமாக செய்ய வேண்டும். அதனால் அமைதியாக கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறோம். இல்லை என்றால் அடுத்த கட்டமாக நடவடிக்கை மேற்கொள்வோம். பெறப்படும் கையெழுத்துகளை முதலமைச்சரிடமும், சம்மந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் எடுத்து செல்வோம்" என்றார்.