"பந்தயம் தான் நம்மளை காப்பாத்தும்".. கடலில் மாஸ் காட்டும் சூரி.. மண்டாடி டீசர்!
சென்னை: தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து, வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்திற்குப் பிறகு கொட்டுக்காளி, கருடன், மாமன் எனத் திறமையான கதைகளைத் தேர்ந்தெடுத்து முன்னணி கதாநாயகனாக உருவெடுத்து இருக்கும் சூரி நடித்து வரும் மண்டாடி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
செல்ஃபி படப் புகழ் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் 'மண்டாடி'. மீன் பிடிக்கும் மீனவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டும், கடலில் நடக்கும் படகுப் பந்தயத்தை அடிப்படையாகக் கொண்டும் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் விறுவிறுப்பான டீசர் வெளியாகியுள்ளது. ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் 'மண்டாடி' திரைப்படத்தில் மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ், மிதுன் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
₹80 கோடி பட்ஜெட்: சூரியின் திரை வாழ்க்கையிலேயே அவர் கதாநாயகனாக நடிக்கும் படங்களிலேயே மிக அதிகபட்சமாக ரூ. 80 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. கடலின் பின்னணியில் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
டீசரில் மிரட்டும் சத்யராஜின் குரல்: சற்றுமுன் வெளியாகியுள்ள 'மண்டாடி' டீசரின் ஆரம்பம் முதலே ரசிகர்களைக் சீட்டின் நுனிக்கே கொண்டு செல்லும் வகையில் மிக விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது. டீசரின் பின்னணியில் நடிகர் சத்யராஜின் கம்பீரமான குரலில், நாம பந்தயத்தைக் காப்பாத்தல... பந்தயம்தான் நம்மளைக் காப்பாத்துது என்ற வசனத்துடன் டீசர் தொடங்குகிறது. பின் பறந்து விரிந்த கடலில் படகுகள் சீறிப்பாயும் காட்சிகளுக்கு இடையே, "களமிறங்கும் விளையாட்டு வீரர்கள் பந்தயத்திற்கு உண்மையா இருந்தா... இந்த காத்தும் கடலும் என்னைக்குமே உங்களைக் கைவிடாது" என்று சத்யராஜ் பேசும் வசனங்கள் அதிர வைக்கின்றன.
செப்டம்பர் 10 ரிலீஸ்: அதன்பின் வரும் காட்சிகள் அனைத்திலும் சூரி கடலுக்குள் கட்டுமஸ்தான உடலமைப்போடு, சண்டை காட்சிகளிலும் படகுப் போட்டியிலும் மிரட்டலாக நடித்து மிகப்பெரிய சம்பவத்தையே செய்துள்ளார். வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'மண்டாடி' படத்தின் இந்த டீசர், தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. சூரியின் முந்தயப்படங்களைப் போல இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.