பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட்ட அமைச்சர்; தவெகவினர் முண்டியடித்தபடி செல்ல முயன்றதால் பரபரப்பு
பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட்ட அமைச்சர்; தவெகவினர் முண்டியடித்தபடி செல்ல முயன்றதால் பரபரப்பு
தவெகவினர் அருங்காட்சியத்தில் அரங்கிற்கு நுழைவதைத் தடுக்கும் வகையில், அறைகளின் கதவுகள் அடைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Published : July 20, 2026 at 10:55 AM IST
திருநெல்வேலி: பொருநை அருங்காட்சியகத்தை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் பார்வையிட்டார். அப்போது, தவெகவினர் ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி உள்ளே செல்ல முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி பகுதியில் தொன்மைத் தமிழ் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் தாமிரபரணி நதிக்கரையில் அகழாய்வு நடத்தப்பட்டப் பகுதிகளான ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை, துலுக்கர்பட்டி ஆகிய இடங்களில் கிடைக்கப் பெற்ற தொல்பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் ரூபாய் 67 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தைச் சுற்றுலாப் பயணிகள் பார்த்து வியந்து வருகின்றனர்.
இந்த சூழலில், நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில், வரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் அருங்காட்சியகத்தின் பராமரிப்புப் பணிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை மற்றும் செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்றிரவு (ஜூலை 19) பொருநை அருங்காட்சியத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டார்.
மின்னொளியில் ஜொலித்த காட்சிக் கூடங்களை அமைச்சர் ஒவ்வொன்றாகப் பார்வையிட்டு வியந்தார். அப்போது, தொல்லியல் பொருட்கள் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் தொல்லியல் பொருட்கள் குறித்தும், பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் குறித்தும், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், அருங்காட்சியங்களில் உள்ள தொழில்நுட்ப வசதிகளையும் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் மற்றும் துறைச் சார்ந்த அரசு உயரதிகாரிகள், பொருநை அருங்காட்சியக அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இங்கு தாமிரபரணி நாகரிகத்தை வெளிப்படுத்தும் பல்வேறு அகழ்வாராய்ச்சிப் பொருட்கள், பழங்கால மண்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், மனித எச்சங்கள், நாணயங்கள், ஆபரணங்கள் உள்ளிட்டவை அறிவியல் முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, அமைச்சரின் வருகையையொட்டி அருங்காட்சியக நுழைவுவாயிலில் தவெகவினரின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அமைச்சர் வந்ததும், தொண்டர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்தப்படி உள்ளே செல்ல முயன்றனர். தவெகவினர் அருங்காட்சியகத்தின் அரங்கிற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் அறையின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.