பரந்தூர் டிராப்! சென்னை ஏர்போர்ட்டில் திடீரென மாறப்போகும் மாபெரும் பிளான்...
பரந்தூர் டிராப்! சென்னை ஏர்போர்ட்டில் திடீரென மாறப்போகும் மாபெரும் பிளான்... வெளியானது அப்டேட்!
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் 4 கிலோமீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட மேம்பாலப் பாதை (Elevated Corridor) அமைக்க முன்மொழிந்துள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய சாட்டிலைட் முனையத்தை (Satellite Terminal), தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையோடு இணைக்கும் சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த பசுமைப்பாதை (Greenfield) விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதைய சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளில் கவனம் திருப்பப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, விமான நிலைய ஓடுபாதைகள் சந்திக்கும் அகலமான பகுதியில் ஐந்தாவது முனையமாக ஒரு புதிய சாட்டிலைட் முனையம் கட்டப்படவுள்ளது. புதிய முனையத்திற்கு தேவையான கூடுதல் நிலங்கள் ஏதும் புதிதாக கையகப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்ற நிலையில், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் இந்த புதிய சாலை இணைப்பு திட்டம் வடிவமைக்கப்படுகிறது.
தமிழக அரசு துறைச் செயலாளர்கள் மட்டத்திலான உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) மூத்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த சாட்டிலைட் முனையம் மற்றும் சாலை இணைப்பு திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விமான நிலையத்தின் எல்லையையொட்டி செல்லும் அடையாறு ஆற்றின் இயற்கை வழித்தடத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளை பாதிக்காத வகையிலும் இந்த இணைப்புச் சாலையை உருவாக்குவது குறித்து அரசு கவனம் செலுத்தி வருகிறது. 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் அடையாறு ஆற்றின் நீர் ஓட்டம் தடையின்றி செல்ல வேண்டும் என்பதை முதன்மை காரணியாக கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதேவேளையில், சென்னை ஒருங்கிணைந்த நகர்ப்புற போக்குவரத்து அதிகார அமைப்பு (CUMTA) தரைமட்டத்திலேயே சாலையை அமைக்க பரிந்துரை செய்துள்ளது. தரைமட்டச் சாலையாக அமையும் பட்சத்தில், பொழிச்சலூர் மற்றும் தாரப்பாக்கம் உள்ளிட்ட இடைப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் இந்த சாலை அணுகக்கூடியதாக இருக்கும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
இந்த புதிய சாட்டிலைட் முனையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் போது சென்னை விமான நிலையத்தின் ஒட்டுமொத்த பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 35 மில்லியனில் இருந்து 55 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விரைவு வெளியேறும் டாக்சிவே (Rapid Exit Taxiway) அமைப்பின் துணையோடு, ஒரு மணி நேரத்திற்கு கையாளும விமானங்களின் எண்ணிக்கை 35-லிருந்து 45-ஆக உயர்ந்து ஓடுபாதையின் செயல்திறன் கணிசமாக அதிகரிக்கும்.
புதிய சாட்டிலைட் முனையம் பயணிகள் போக்குவரத்து மட்டுமன்றி சரக்கு போக்குவரத்தையும் கையாளும் வகையில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட உள்ளது. புதிய இணைப்புச் சாலையானது விமான நிலையத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். முக்கிய முனையங்களுக்கும் சாட்டிலைட் முனையத்திற்கும் இடையே இணைப்பு விமானங்களை பிடிப்பதற்காகச் செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்கனவே உள்ள உள்வட்டச் சாலை (Perimeter Road) மற்றும் பிரத்யேக வாகனங்கள் பயன்படுத்தப்படும். நிபுணர் குழுவின் சாத்தியக்கூறு ஆய்வு முடிவடைந்து தமிழக அரசு இறுதி ஒப்புதல் அளித்தவுடன் இதற்கான பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி