📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 07, 2026 04:30 PM

பரந்தூர் விமான நிலையம்; தமிழக அரசிடம் கடிதம் இல்லை

பரந்தூர் விமான நிலையம்; தமிழக அரசிடம் கடிதம் இல்லை

புதுடெல்லி: சென்னை பரந்தூரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய பசுமைவழி அனைத்துலக விமான நிலையத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யவோ அதைத் திரும்பப் பெறவோ கோரித் தமிழக அரசிடமிருந்து எவ்விதக் கடிதமும் வரவில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

சென்னைத் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அத்தகைய கடிதம் அல்லது தகவல் எதுவும் மத்திய அரசுக்கு வரவில்லை என்று அவர் கூறினார்.

பரந்தூரில் அனைத்துலகப் பசுமைவழி விமான நிலையம் அமைப்பதற்காகத் தமிழக அரசின் ‘டிட்கோ’ நிறுவனத்திற்கு 2025 ஏப்ரல் 7ஆம் தேதி மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளதை அவர் சுட்டினார்.

பசுமைவழி விமான நிலையக் கொள்கையின்படி, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முழுப் பொறுப்பும் மாநில அரசைச் சார்ந்ததாகும்.

நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல், பிற சட்டபூர்வ அனுமதிகளைப் பெறுதல், நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்தல் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தே விமான நிலையக் கட்டுமானப் பணிகளுக்கான காலக்கெடு அமையும் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.