புதிய கட்சி குறித்த அறிவிப்பா?
சென்னை: சமூக வலைதளங்கள் மூலம் நாளை (ஜூன் 5) அனைவரிடமும் உரையாட உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் புதிய கட்சி தொடங்குவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அவர் பாஜகவில் இருந்து விலக ராஜினாமா கடிதம் அளித்ததாகவும் தகவல்கள் வெளியானது.
மேலும், அவர் சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அண்ணாமலையின் விலகலை தடுக்க பாஜக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அண்ணாமலை இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், அவர் ஒரு முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன. உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.