சட்டசபை செயலர் சீனிவாசன் பதவி விலகலுக்கு காரணம் என்ன? பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இதோ!
சென்னை: சட்டசபை செயலர் சீனிவாசன் பதவி விலகல் பின்னணியில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சி காலங்களில், சட்டசபை செயலராக சிறப்பாக பணியாற்றியவர் சீனிவாசன். சட்டசபை செய்தி பிரிவில் இருந்து படிப்படியாக முன்னேறி, இப்பதவிக்கு வந்ததால், சட்டசபை விதிகள் அனைத்தும் இவருக்கு அத்துப்படி. இவரது திறமையை, அ.தி.மு.க., - தி.மு.க., அரசுகள் சரியாக பயன்படுத்திக் கொண்டன.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை ஓட்டெடுப்பு, சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம் போன்றவற்றில், சட்டசபையில் பெரிய அளவில் பிரச்னை எழாமல் பார்த்து கொண்டதில், சீனிவாசன் பங்களிப்பு அதிகம். அதனால்தான், அ.தி.மு.க., ஆட்சியில் சபாநாயகரின் தனிச் செயலராக இருந்த சீனிவாசனுக்கு, தி.மு.க., ஆட்சியில் மூன்று ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
அவரது பணி நீட்டிப்பு காலம், செப்டம்பர் மாதம் வரை இருந்தது. ஆனால், திடீரென்று தன் பதவியை, சீனிவாசன் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா பின்னணியில், பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து, சட்டசபை செயலக வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பின், ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதற்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த நேரத்தில், அ.தி.மு.க.,வின் ஒரு பிரிவினரின் ஆதரவு, த.வெ.க.,விற்கு கிடைத்தது.ஓட்டெடுப்பை எந்த வித பிரச்னையும் இன்றி, சீனிவாசன் நடத்தி முடித்தார். முதல்வர், அமைச்சர்கள் எப்படி செயல்பட வேண்டும் என, பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினார்.
இது, முதல்வரின் ஆலோசகராக உள்ளவருக்கும், இரண்டு அமைச்சர்களுக்கும் பிடிக்கவில்லை. சீனிவாசன் முதல்வருடன் நெருங்கிவிட்டால், தங்களது பதவிக்கு பங்கம் வந்து விடும் என நினைத்து, அவரை மரியாதை குறைவாக நடத்தியுள்ளனர். அமைச்சர் ஒருவர் ஒருமையில் பேசியுள்ளார்.
இதனால், மனம் நொந்த சீனிவாசன், பதவியை ராஜினாமா செய்து சென்று விட்டார். இது முதல்வர் விஜய்க்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.