புதிய கட்சித் தொடக்கமா? பாஜகவில் நீடிப்பா?
சென்னை: புதிய கட்சி தொடக்கமா? பாஜகவில் நீடிப்பா? என்பது தொடர்பாக இன்று மதியம் சமூக ஊடகங்களில் தோன்றி அண்ணாமலை மனம் திறந்து பேசுகிறார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, புதிய கட்சி தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகின. சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, இது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்தச் சூழலில், கடந்த 1-ம் தேதி டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனை சந்தித்து, கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்ததாக தகவல் வெளியானது. பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினார்.
அண்ணாமலையை சமரசம் செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேசிவிட்டு, இன்று தமிழகம் திரும்பி தனது முடிவை அறிவிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், சமூக ஊடகங்கள் வாயிலாக நேரடியாக மக்களிடம் உரையாட உள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘ஜூன் 5-ம் தேதி (இன்று) மதியம் 12 மணிக்கு, சமூக வலைதளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும் ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன் தனது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் எக்ஸ் தள கணக்குகளின் லிங்குகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.
தலைவர்கள் வாழ்த்து
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது 42-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.