தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர்கள் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ்
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர்கள் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
’இயக்குனர் இமயம்’ பாரதிராஜா மற்றும்`திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் என்கின்ற இரண்டு மாபெரும் திரை ஆளுமைகள் நேற்றைக்கு, இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்குமே தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்வார்கள் என உதயநிதி தெரிவித்தார்.
Published : August 17, 2026 at 8:23 AM IST
சென்னை: அண்ணா, கலைஞர் வரிசையில் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் இருவரும் தான் என உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில், மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே.பாக்யராஜ் ஆகியோரின் நினைவாக, ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’ என்ற பிரம்மாண்ட விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அதில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், “திரைக்கதை மன்னன் பாக்யராஜ், இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோரின் நினைவைப் போற்றுகின்ற வகையில், இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்வுப்பூர்வமானதாக உள்ளது.
உங்களில் ஒருவன்
'கலைஞானி' கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துள்ளார். இதன்பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் நிறைவுரையாற்ற இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நானும் உங்களில் ஒருவனாக, இந்த திரைத்துறையில் ஒரு சில நாட்கள் பணிபுரிந்த ஒருவனாக அந்த உரிமையுடன் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா - திரைக்கதை மன்னன் பாக்யராஜ் ஆகியோரின் நினைவுகளைப் போற்றும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் திரையுலகம் சார்பில் இன்று நடத்தப்பட்ட ‘ராஜகோபுரங்கள் - நினைவு உற்சவம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றேன். தமிழ்த்திரையுலகிற்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்திய பாரதிராஜா… pic.twitter.com/G2UZvyzquL
இயக்குநர் இமயம் பாரதிராஜா
அண்ணா, கலைஞர் வரிசையில் சினிமாவின் மொழியை எல்லோருக்குமானது என்று ஆக்கியவர்கள், அதை இன்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற இரண்டு பேர் தான் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ்.
பாரதிராஜா சார் தான் முதன்முதலில் கேமராவை கிராமங்களுக்கும், வயல்வெளிக்கும் எடுத்துக் கொண்டு சென்றவர். குறிப்பாக, அவருடைய 'வேதம் புதிது' திரைப்படத்தில், திராவிட இயக்கத்தின் கொள்கையான சாதி ஒழிப்பையும், சமூக நீதியையும் உரக்கப் பேசினார்.
எனக்கு சின்ன வயதிலிருந்து பாரதிராஜாவை நன்றாக தெரியும், பல பேருக்கு அது தெரியாது. அதற்கு காரணம், டான் பாஸ்கோ பள்ளியில் நானும், அவரது மகன் மனோஜும் கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஒன்றாகப் படித்தோம், நாங்கள் வகுப்பறை நண்பர்கள்.
இன்றைக்கு அவர்கள் விட்டுச் சென்ற நினைவுகள் என்றுமே நம் மனதில் நிலையாக இருக்கின்றன. கலைஞர் மீது பாரதிராஜாவிற்கு மிகப்பெரிய அன்பும், பாசமும் உண்டு. கலைஞரும் பாரதிராஜாவின் படைப்புகளை மிகவும் ரசித்து பாராட்டியுள்ளார். எங்களுடைய கட்சித் தலைவரும் பாராட்டியுள்ளார்.
2022-ல் பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சை முடித்து வீடு திரும்பியிருந்த சமயத்தில், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எங்கள் தலைவர், அவருடைய வீட்டிற்கே சென்று அவரிடம் நலம் விசாரித்தார். தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியது மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவை இந்திய சினிமாவுக்கான உலக அடையாளமாக ஆக்கியவர் தான் பாரதிராஜா. அவருடைய மறைவு இந்திய திரையுலகிற்கே ஒரு மிகப்பெரிய பேரிழப்பு” என்றார்.
திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ்
“அதேபோல தான் கே.பாக்யராஜ் சாரும். பாரதிராஜா சாருடைய சீடராகத் தன்னுடைய திரைப்படப் பணிகளைத் தொடங்கி, ‘திரைக்கதை மன்னன்’ என்று இந்தியா முழுவதும் பாராட்டைப் பெற்றார். பாக்யராஜ் சாருடைய படங்கள் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையை அப்படியே சினிமாவில் பார்க்கின்ற மாதிரி ஒரு உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தியது.
அதுமட்டுமில்லாமல், யாருமே பேசத் தயங்குகின்ற கதைகளை எல்லாம் மிகவும் சுவாரசியமாக, யாரும் முகம் சுளிக்காதவாறு, அனைவரும் ரசிக்கும்படி சினிமாவில் பேசியவர் இயக்குநர் பாக்யராஜ்.
மேலும் ஒரு சிறந்த பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் தனிமுத்திரையைப் பதித்தார். பாக்யராஜ் எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல, கலைஞருக்கும் மிகுந்த நெருக்கமான பழக்கம் உடையவர். அதனால் தான் எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பிறகு, கலைஞரை தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்டு, திமுகவில் இணைந்து பணியாற்றினார்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு அரசியலில் இருந்து அவர் விலகியிருந்தாலும், எங்களுடைய தலைவரிடம் எப்போதும் அதே பாசத்துடன் பழகியவர் பாக்யராஜ். சமீபத்தில், இதே அரங்கத்தில் 50-ஆம் ஆண்டு விழா எடுத்த போது, எங்கள் தலைவர் கலந்துகொண்டு அவரை பாராட்டி பேசினார். அவரது கலைப்பயணம் என்றைக்கும் நம் மனதில் நிலைத்து நிற்கும்.
மாபெரும் திரை ஆளுமைகள்
`இயக்குனர் இமயம்’ பாரதிராஜா மற்றும்`திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் என்கின்ற இந்த இரண்டு மாபெரும் திரை ஆளுமைகள் நேற்றைக்கு, இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்குமே தமிழ் சினிமாவின் அடையாளமாக நிச்சயம் திகழ்வார்கள்” என பேசினார்.