புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருது: அமித்ஷா வழங்கினார்
யூனியன் பிரதேசங்களை பலப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம்
புதுச்சேரி, ஆக. 9–
ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருதை புதுச்சேரி காவல்துறைக்கு இன்று அமித்ஷா வழங்கினார்.
2 நாட்கள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த பிறகு, நேற்று இரவு 8.30 மணியளவில் புதுச்சேரி வந்தார். கவர்னர் மாளிகைக்கு வந்த அவருக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்பு அளித்தனர். பின்னர் கவர்னர் மாளிகையில் அமித்ஷா தங்கினார்.
இந்த நிலையில் இன்று காலை கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புதுவை காவல்துறைக்கு ‘ஜனாதிபதியின் வண்ணக்கொடி’ விருதை வழங்கினார். ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருது என்பது இந்தியாவின் முப்படைகள், துணை ராணுவப் படைகள் அல்லது மாநிலக் காவல்துறை பிரிவுகளுக்கு அவற்றின் சிறப்பான நீண்டகாலச் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்தைப் பாராட்டி ஜனாதிபதியால் வழங்கப்படும் மிக உயரிய கவுரவமாகும்.
முன்னதாக அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் ரங்கசாமி, துணை நிலை கவர்னர் கைலாஷ்நாதன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து அமைச்சர் அமித்ஷாவுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
10 பேருக்கு மயக்கம்
இந்த அணிவகுப்பின்போது கடும் வெயிலின் காரணமாக பெண் போலீசார் உள்ளிட்ட 10 பேர் திடீரென மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:-
கொரோனா பெருந்தொற்று காலத்தில் யூனியன் பிரதேசங்களில் தகவல்களை கேட்டபோது, புதுச்சேரி காவல்துறை மக்களுக்கு சேவை செய்வதில் முதலிடத்தை பெற்றது என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் சாகச நிறை மனதோடு பணி புரிந்திருக்கிறீர்கள்.அச்சமின்றி துணிச்சலான மனதுடன் காவலர்கள் ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட அவர் நேராக ராஜீவ்காந்தி சிலை சதுக்கத்தில் உள்ள அக்கார்டு ஓட்டலுக்கு சென்றார். அங்கு சிறிது நேர ஓய்வுக்குப் பின் அவர் பகல் 12 மணி முதல் 1 மணி வரை கட்சியின் முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சியின் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.