பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சா?.. தனுஷுடன் சிவகார்த்திகேயன், அனிருத்துக்கு இதுதான் பிரச்னையா?
சென்னை: தனுஷ் சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூரில் தனது ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக நடந்த ரத்த தான முகாமிலும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரது கால்களில் சிறுவர்களும், சிறுமிகளும் விழுந்த வீடியோ வைரலாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பேட்டி ஒன்றை எடுத்துப்போட்டு புதிய விவாதத்தை கிளப்பியிருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் இப்போது டாப் ஹீரோவாக இருக்க அவரது திறமை முக்கிய காரணம் என்றாலும்; அவர் சினிமாவுக்குள் வந்ததற்கு தனுஷ்தான் காரணம். தன்னுடைய 3 படத்தில் சின்ன ரோல் கொடுத்த அவர்; சில காலம் கழித்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து எதிர்நீச்சல் திரைப்படத்தையும் தயாரித்தார். இரண்டு பேருமே உடன் பிறவா சகோதரர்கள் போன்றே பொதுவெளியில் வலம் வந்தார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.
பிரச்னையா?: இப்படிப்பட்ட சூழலில்தான் அவருக்கும், சிவகார்த்திகேயனுக்கும் பிரச்னை என்று சொல்லப்பட்டது. அந்தப் பேச்சுக்களுக்கு சலங்கை கட்டும் வகையில் அமைந்தது இரண்டு பேரின் செயல்பாடுகளும், பேச்சும். கொட்டுக்காளி பட விழாவில் பேசிய சிவா, 'நான் யாருக்காவது வாய்ப்பு கொடுத்துவிட்டு; என்னால்தான் இவர் வளர்ந்தார் என எப்போதும் சொல்லமாட்டேன்' என கூறியிருந்தார். அதில் தனுஷைத்தான் மறைமுகமாக தாக்கியிருக்கிறார் எஸ்கே என்று பிரச்னைகள் கிளம்பின.
தனுஷ் மேனேஜர்: அதேபோல் தனுஷின் சில மேடை பேச்சுக்களும் எஸ்கேவுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டன. மேலும் அவரது மேனேஜரும் ஒரு மேடையில் தனுஷை முதுகில் குத்திவிட்டு வளர்ந்திருக்கிறார்கள் என கூறினார். அதுவும் சிவாவைத்தான் சொல்லியிருக்கிறார் என்று கூறப்பட்டது. போதாக்குறைக்கு கேப்டன் மில்லரும், அயலானும் ஒரே நாளில் ரிலீஸானதால்; கண்டிப்பாக இரண்டு பேருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு இப்போது சண்டை உச்சத்தில் இருப்பதாக திரைத்துறையினரே ஓபனாக முணுமுணுக்க தொடங்கினார்கள்.
அனிருத்துடனும் சண்டையா?: சிவாவை எப்படி சினிமாவுக்கு அழைத்து வந்தாரோ அதேபோல் அனிருத்தையும் தனுஷ்தான் அழைத்து வந்தார். தொடர்ச்சியாக தன்னுடைய படங்களுக்கு அவரையே இசையமைப்பாளராகவும் கமிட் செய்தார். ஆனால் சில வருடங்களாக இரண்டு பேரும் பணியாற்றுவதில்லை. அதற்கும் காரணம் இருவருக்குமிடையேயான கருத்து வேறுபாடுதான் என்று குரல்கள் கேட்டன. இப்படி தன்னுடைய நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களுடன் தொடர்ச்சியாக தனுஷுக்கு மனஸ்தாபம் ஏற்பட என்னதான் காரணமாக இருக்கும் என கேள்விகள் பிறந்தன.
இதுதான் காரணமா?: இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பேட்டியையும், சமீபத்தில் ரத்த தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தனுஷ் காலில் சிறுவர்களும், சிறுமிகளும் விழுந்த வீடியோவையும் ரசிகர்கள் முடிச்சு போட்டிருக்கிறார்கள். அதாவது எஸ்கே அந்தப் பேட்டியில், "எல்லோருமே மனிதர்கள்தான். அப்படித்தான் பார்க்க வேண்டும். இதையெல்லாம் விட முக்கியம் சுயமரியாதை. அந்த சுயமரியாதையை ஒருவரிடம் கிடைக்கவில்லை என்றால் அவர்களிடம் இருக்கமாட்டேன். எவ்வளவு பெரிய ஆதாயம் அவர்களால் வந்தாலும் முடியாது" என குறிப்பிட்டிருந்தார்.
இதை பார்த்த ரசிகர்களோ, பொதுவெளியிலேயே மற்றவர்களின் சுயமரியாதையை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் ரசிகர்கள் தன் காலில் விழுந்ததை அங்கீகரித்த தனுஷ்; எஸ்கே, அனிருத் ஆகியோரின் சுயமரியாதையையும் சீண்டியிருப்பார். அதனால்தான் அவர்கள் அவரிடமிருந்து விலகிவிட்டார்கள் என்று புதிய பேச்சை கிளப்பியிருக்கிறார்கள். இதற்கு தனுஷின் ரசிகர்களும் பதிலடி கொடுத்துவருகிறார்கள்.